ஜவுளி வியாபாரி ஆம்னி வேனில் திடீரென தீ பிடித்ததால் ஜவுளிகள் தீயில் எரிந்து நாசம்
திருச்சுழி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஜவுளி வியாபாரி ஆம்னி வேனில் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு; ரூ 3 லட்சம் மதிப்புடைய ஜவுளிகள் தீயில் எரிந்து நாசம்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உடையனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மதிதயன். இவர் ஊர் ஊராக சென்று ஆம்னி வேனில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று தீபாவளி பண்டிகையை ஒட்டி உடையனேந்தல், கிராமத்திலிருந்து காரியாபட்டி, கல்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அதிகாலையிலேயே சென்று ஜவுளி வியாபாரத்தை முடித்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது காரியாபட்டி செல்லும் சாலையில் உடையனேந்தல் அருகே சென்ற போது ஆம்னி வேனில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு ஆம்னி வேனில் தீடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருச்சுழி தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் வியாபாரத்தை முடித்துவிட்டு வேனில் மீதமிருந்த சுமார் 3 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள புதுத் துணிகள் தீயில் கருகி நாசமாகின. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.


