பாம்பன் கடலில் வீணாகும் காவிரி குடிநீர்
கடந்த நான்கு நாட்களாக காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு: பாம்பன் கடலில் வீணாகும் காவிரி குடிநீர்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்:
பாம்பன் சாலை பாலத்தில் காவிரி குழாயில் ஏற்பட்ட உடைப்பால் கடந்த நான்கு நாட்களாக கடலில் கலந்து குடிநீர் வீணாகிறது. குடிநீர் கடலில் வீணாகி வருவதால் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. இதே போல் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிககளில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பாம்பன் சாலை பாலத்தின் நடைபாதையில் பெரிய குழாய் பதிக்கப்பட்டு அதன் மூலம் காவிரி குடிநீர் தீவு மக்களுக்கு கொண்டுவரப்படுகின்றது.
இந்த நிலையில் பாம்பன் சாலை பாலத்தில் சாலைக்கு அடியில் கடந்த நான்கு நாட்களாக காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதில் வரும் குடிநீர் பாலத்தின் பக்கவாட்டுல் உள்ள படிகள் வழியாக அதிக அளவில் கடலில் வீணாகிக் கொண்டிருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் மக்கள் குடிதண்ணீருக்காக கஷ்டப்பட்டு வரும் நிலை மறுபுறம் இருக்க பாம்பன் சாலை பாலத்தில் இதுபோன்று அடிக்கடி காவிரி குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் பல ஆயிரம் லிட்டர் கடலில் கலந்து வீணாகி வருவது வேதனை அளிப்பதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.


