கிருஷ்ணருக்கு அமுது படைக்க பத்தாயிரம் கலசங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நெல்லை மாவட்டம் அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் உள்ள கிருஷ்ணருக்கு அமுது படைக்க பத்தாயிரம் கலசங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது மண்பானைகளில் வண்ண ஓவியம் தீட்டும் பணி மற்றும் இனிப்பு பலகாரங்கள் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது .
இந்தியாவில் மிக கோலாகலமாகக் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ணர் அவதரித்த தினத்தையே கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடி மகிழ்கிறோம். கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி போன்ற பல பெயர்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு இந்தத் திருநாள் வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி கொண்டாடப்படுகிறது இத்தகைய விழா நெல்லை மாவட்டத்திலும் கோலாகலமாக நடைபெறும். நெல்லை மாவட்டம் அருகன்குளம் பகுதியில் அமைந்துள்ள கோசாலையில் அமைந்திருக்கும் கிருஷ்ணருக்கு கோகுலாஷ்டமி அன்று அவருக்கு விருப்பமான உணவு பதார்த்தங்கள் படைத்து வழிபடுவது வழக்கம்.அதன் படி கோகுலாஷ்டமி அன்று கிருஷ்ணருக்கு பிடித்தமான அதிரசம், லட்டு, சீடை, அவல், பொறி, அப்பம், பூந்தி போன்ற அமுது படைப்பதற்கு பத்தாயிரத்தி எட்டு மண்பானைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
இந்த பானைகளில் பிடித்தமான பதார்த்தங்கள் வைக்கப்பட்டு கோகுலாஷ்டமி அன்று நடைபெறும் பூஜையின் போது கிருஷ்ணர் முன்னால் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்படும் இதற்காக பானைகள் தயார் செய்யப்பட்டு அதில் வண்ண ஓவியங்கள் வரையப்படும் இந்த ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக பானைகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தற்போது பானைகளில் கிருஷ்ணர், மயில், பசு, சிவன் உள்ளிட்ட பல்வேறு வகையான ஓவியங்கள் வரையப்பட்டு இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இந்தப் பணியில் அண்டை மாநிலமான கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓவியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பாரம்பரிய மண்பானைகளை பயன்படுத்தி வழிபாடு நடத்தப்படுவதால் நலிவடைந்துள்ள மண்பாண்டக் இளைஞர்களும் பயன் பெறுவதுடன் டிஜிட்டல் மயமாகி வரும் இவ்வுலகில் ஓவியத்திற்கும் வாய்ப்பு அளிப்பதால் ஓவிய கலைஞர்களையும் இது ஊக்கிவித்து வருகிறது.

கிருஷ்ண ஜெயந்திக்காக இவ்வாண்டு 3டி வகையிலான ஓவியங்கள் வரையும் பணியும் நடந்து வருகிறது. மேலும் இந்த கலசங்களில் வைக்க இனிப்பு வகைகளும் தயாரிக்கும் பணிதீவிரமாக நடைபெற்று வருகிறதது.


