கோவில் இடத்திற்கான பட்டா பெயர் மாற்றியுள்ளதை நீக்கக்கோரி கிராம மக்கள் மனு
கோவில் இடத்திற்கான பட்டா பெயர் மாற்றியுள்ளதை நீக்கக்கோரி கிராம மக்கள் மனு அளித்தனர்.
இது குறித்து தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை கிராமத்தினர் கொடுத்துள்ள மனுவில் கூறியதாவது:
எங்கள் பாரம்பரியமான குலதெய்வம் ஸ்ரீ வீரப்பனார் துரோபதை அம்மன் கோவில் சூரக்கோட்டையில் உள்ளது. இந்த கோவில் மூதாதையர் காலத்தில் இருந்து தற்போது வரை எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆனால் மேற்படி இடத்திற்கான பட்டாவை எங்கள் கிராம நிர்வாக அலுவலர் கடந்த 2023 ஆம் ஆண்டு எங்கள் ஒப்புதலோ அல்லது அனுமதியோ மற்றும் தகவல் தெரிவிக்காமல் எங்கள் ஊரைச் சேர்ந்த சிலருக்கு பட்டாவை மாற்றி விட்டார்கள்.
பட்டாவை அவர்கள் பெயருக்கு மாற்றி இருப்பது தற்போது தான் எங்களுக்கு தெரியவந்துள்ளது.
தற்போது பெயர் பட்டா மாற்றம் செய்துள்ளதை வைத்துக் கொண்டு நாங்கள் மற்றும் எங்கள் குடும்ப பெண்கள் வழிபடுவதற்கும் உள்ளே நுழைய விடாமல் எங்களை தடுத்து நிறுத்துகிறார்கள்.
மேலும் அந்த பட்டாவையும் வைத்துக்கொண்டு போலீசில் பொய் புகார்கள் கொடுத்து எங்களை மிரட்டுகிறார்கள். தற்போது வருகிற ஆடி கடைசி 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆடிக்கழிவு சாமி கும்பிடுவதை தடுக்கின்றனர்.
மேலும் இந்த வழியாக செல்லும்போது போகக்கூடாது என்றும் தகாத வார்த்தைகளை பேசுகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை நீக்கி நாங்கள் தொடர்ந்து எங்கள் குலதெய்வம் வழிபாடு செய்வதற்கு எந்தவித இடையூறும் இன்றி ஆவணம் செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


