மழை காரணமாக, வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை காரணமாக, வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து, நில அளவை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தின் பழைய கட்டிடம் மேற்கூரை இடிந்து விழுந்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று மாலை துவங்கி விடிய விடிய கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரம் கிராமத்தில் ராஜப்பன் என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
இதில் வீட்டின் ஒரு பகுதி முற்றிலும் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக காயங்கள் மற்றும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.
இதுபோல் மயிலாடுதுறையில் நில அளவை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தின் பழைய கட்டிடம் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்தது. சமீபத்தில் இந்த அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட பிறகு, கோப்புகள் பராமரிக்கும் இடமாக செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் மழை காரணமாக கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அலுவலகம் தற்போது செயல்பாட்டில் இல்லை என்பதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

இருப்பினும் அலுவலக சுவர்கள் விரிசல் விட்டு காணப்படும் நிலையில், அப்பகுதியில் அரசினர் மாணவியர் தங்கும் விடுதியில் பயிலும் மாணவிகள் அந்த வழியே சென்று வருவதால் மேலும் இடிவதற்குள், சேதமடைந்த கட்டிடத்தை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபோல் மயிலாடுதுறை சார்பதிவாளர் அலுவலகத்தில் மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் கட்டிடத்தின் காம்பவுண்ட் சுவரின் ஒரு பகுதி சேதமடைந்தது.


