நிலத்தடி நீருக்கு வரி மாவட்ட விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
வேளாண் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படும் என ஒன்றிய அரசின் முடிவுக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் கண்டனம். அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.
வேளாண் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் பாட்டீல் அளித்துள்ள இந்த அறிவிப்பிற்கு 1,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பருவ மழை மற்றும் காவிரி நீர் உரிய நேரத்தில் கிடைக்காத போது நிலத்தடி நீரை மட்டுமே நம்பி விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த நிலத்தடி நீருக்கு வரி என்ற அறிவிப்பு விவசாயத்தையும் – விவசாயிகளையும் அழிக்கும் செயல் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த அறிவிப்பு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளது எனறும், பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பல லட்சம் கன அடி தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு வரி விதிக்காத ஒன்றிய அரசு ஏழை எளிய விவசாயிகளுக்கு வரி விதிப்பது கண்டனத்திற்குரியது. எல்லாத்திற்க்கும் வரி போட்டு தற்போது நிலத்தடி நீருக்கும் வரி விதித்துள்ளது.
உடனடியாக இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இல்லை என்றால் நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பல்வேறு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒன்றிய அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.


