டெல்லியில் அடுத்த அமைச்சருக்கு செக்
டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட்டிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது..
கடந்த 2021-2022 காலகட்டத்தில் டெல்லியில் அமல்படுத்தப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான கொள்கை திட்டம் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்பட்டதாக குற்றசாட்டு எழுந்த நிலையில், முறைகேடு மற்றும் ஊழல் நடைபெற்று இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வழக்கு பதவி செய்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அதேசமயம். இந்த வழக்கில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி டெல்லி மாநில முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திர ஜெயின் உள்ளிட்டோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை தொடர்ந்து மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல்வேறு முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இதன்பின், கடந்த வாரம் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
தற்போது, நீதிமன்ற அனுமதியுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலில் இருந்து வருகிறார். இதனிடையே, மதுமான கொள்கை வழக்கில் கடந்த 15ம் தேதி தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மகளும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் எம்எல்சியுமான கே.கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது.
எனவே, தேர்தல் சமயத்தில் மத்திய பாஜக அரசு அமலாக்கத்துறை மூலம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என எதிர்க்கட்சிகள் கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், டெல்லியில் மேலும் ஒரு அமைச்சருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதாவது, மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் போக்குவரத்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.