தேம்ஸ் நதியில் விழுந்த பெண்ணை காப்பாற்ற சென்றபோது உயிர்நீத்த நைஜீரிய இளைஞர்

மெடல் வழங்க வேண்டுமென தந்தை உருக்கம்

லண்டன் பாலத்திலிருந்து கடந்த சனிக்கிழமை பெண் ஒருவர் தேம்ஸ் நதிக்கரையில் தவறிவிழுந்தார். அவரை காப்பாற்றுவதற்காக போலாஜிமி ஒலுபுன்மி ஜிமி (20) என்கிற 20 வயது நைஜீரிய இளைஞரும், மற்றொருவரும் நதியில் குதித்தனர். தகவலறிந்த கடலோர காவல் படை மற்றும் கடற்படை காவல்துறையினர், தேம்ஸ் நதியில் இறங்கி மூவரையும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். போலீஸ் ஹெலிகாப்டரும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
இதன் பலனாக அந்தப் பெண்ணும், மற்றொரு நபரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஏறத்தாழ 6 மணிநேர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் ஜிமி, இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பெண்ணை மீட்க சென்ற இடத்தில், இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவரது தந்தை மைக்கேல் அடிவோலி (63) கூறியது;
ஜிமி மிகவும் மென்மையான, இரக்க குணம் நிறைந்த இளைஞன். எங்கள் குடும்பத்தின் இதயமே அவன்தான். அவன் வாழ வேண்டியவன். அவனது இந்த உன்னத சேவைக்காக அவனுக்கு இறப்புக்கு பிந்தைய மெடல் வழங்க வேண்டும். மெடல் பெற ஜிமி தகுதியானவன். அவன் தேவ தூதன். அவனை நினைத்து பெருமைப்படுகிறேன். அவனை இந்த உலகம் என்றென்றும் நினைவுகூர வேண்டுமென நான் விரும்புகிறேன் என்றார்.
ஜிமியின் இறப்புக்கு அவரது நண்பர்களும் ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்துள்ளனர்.

Add your comment

Your email address will not be published.

fifteen + 15 =