உலகின் முதல் ‘மிதக்கும் நீச்சல் குளம்

லண்டனில் அடுத்த மாதம் திறக்கப்படுகிறது

தரையிலிருந்து 115 அடி உயரத்தில் நான்கு பக்கமும் கண்ணாடிகளாலான உலகின் முதல் மிதக்கும் நீச்சல் குளம் லண்டனில் அடுத்த மாதம் திறக்கப்படுகிறது. லண்டனின் நைன் எல்ம்ஸ் பகுதியில், இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இடையே முற்றிலும் தொழில்நுட்ப வசதிகளின் உதவியுடன் அமைக்கப்பட்ட இந்த நீச்சல் குளம், 10ஆவது மாடியில் அமைந்திருக்கிறது.
82 அடி ஆழம் கொண்ட இந்தக் குளத்தில் 400 டன் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. இங்கிருந்து லண்டன் நகரில் உள்ள பில்லியன் டாலர் அமெரிக்க தூதரகத்தையும், இங்கிலாந்து பாராளுமன்றத்தையும் கழுகு கண் பார்வையில், 360 டிகிரி கோணத்தில் கண்டு மகிழலாம்.
பிரமாண்டமான இந்த நீச்சல் குளத்தின் திறப்பு விழா மே 19ஆம் தேதி நடைபெறுகிறது. பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரோமன் கேம்ப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். அன்றைய தினம் அகுவாபாடிக்ஸ் நீச்சல் வீரர்கள், இந்தக் குளத்தில் நீந்தி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்த இருக்கின்றனர்.
இந்த நீச்சல்குளம் அமைந்துள்ள எம்பஸி கார்டன் கட்டடத்தில், தற்போது வீடுகளின் விலையும் விண்ணை முட்டுகிறது. ஒரு குடியிருப்பின் விலை 6 லட்சம் பவுண்டில் ஆரம்பித்து, உயர செல்ல செல்ல மேல் தளத்தின் விலை 5 மில்லியன் பவுண்ட் வரை உயர்கிறது. காரணம், இங்கு வசிப்பதற்கான வாய்ப்பு பெற்றவர்கள், மேல் தளத்தில் உள்ள மதுபானக் கூடத்தையும், மசாஜ் சென்டரையும் அனுபவித்து மகிழலாம்.

இத்தனை பிரமாண்டமாக நீச்சல் குளத்தை வடிவமைத்தது குறித்து இதன் டெவலப்பர் சீன் முல்ரியான் கூறும்போது, இந்த நீச்சல் குளத்தை கட்ட வேண்டுமென கடந்த 2013ஆம் ஆண்டிலேயே முடிவு செய்தோம். ஆனால், அப்போது தொழில்நுட்ப வசதிகள் கைகொடுக்காததால், கட்ட இயலவில்லை. தற்போது, மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளால்தான் இந்த நீச்சல் குளம் சாத்தியமானது என்றார்.
இந்த நீச்சல் குளத்தில் நீந்தி, கீழே பார்க்கும்போது மேலே வானத்தில் பறப்பதை போன்ற உணர்வு ஏற்படும் என்று நீச்சல் குள வடிவமைப்பு பொறியாளர் பிரெய்ன் எக்கெர்ஸ்லி தெரிவித்திருக்கிறார்.
உலகில் உயரமான நீச்சல் குளம் கடந்த மாதம் துபாயில் 965 அடி உயரத்தில் கட்டப்பட்டது. தற்போது, லண்டனில், உலகின் முதல் மிதக்கும் நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது.

Add your comment

Your email address will not be published.

one × two =