கணினியில் அதிக நேரம் பணிபுரிவது உயிருக்கு ஆபத்து

 

உலக சுகாதார அமைப்பு தகவல்

 

கணினியிலும், மடிக்கணினியிலும் நீண்டநேரம் வேலை செய்வதால் உயிருக்கே ஆபத்து நேரிடுவதாகவும், இவ்வாறு ஆண்டுதோறும் 7,45,000 பேர் உயிரிழப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்று காலத்தில் லண்டனில் ஏராளமானோர் வீடுகளில் இருந்தவாறு அலுவலக பணிகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறு நீண்டநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து, கணினியையே பார்த்துக் கொண்டு இருப்பதால், உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. சராசரியாக வாரத்தில் 35 முதல் 45 மணிநேரம் வரை கணினியில் பணிபுரியலாம். ஆனால், ஒருசிலர் அதையும் தாண்டி பணிபுரிவதால் அது அவர்களது உயிருக்கே உலை வைத்து விடுகிறது.

குறிப்பாக வாரத்துக்கு 55 மணிநேரம் வேலை செய்வதால், பக்கவாதம் ஏற்பட 35 சதவீதமும், மாரடைப்பு ஏற்பட 17 சதவீதமும் வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிலும், தென்கிழக்கு ஆசியா மற்றும் சீனா, ஜப்பான் உள்ளிட்ட மேற்கத்திய பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், சுகாதாரத் துறைகளின் இயக்குநர் மரிய நெய்ரா கூறுகையில், பணியாளர்களின் பாதுகாப்பையும், பணித் திறனையும் மேம்படுத்தவே இந்த ஆய்வை நாங்கள் மேற்கொண்டோம் என்றார். உலக தொழிலாளர் அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், 194 நாடுகளிலிருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன. ஆய்வில், நீண்டநேரம் பணிபுரிந்து உயிரிழந்தவர்களில் 72 சதவீதத்தினர் ஆண்கள் என்பதும், அதிலும் நடுத்தர வயதுடைய இளைஞர்கள் அதிகம் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, வேலை பார்க்கும் நாள்களில் அல்லாமல், 10 ஆண்டுகள் கழித்துதான் மரணம் ஏற்படுவது தெரியவந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட இந்த ஆய்வு கடந்த 2000 முதல் 2016 வரையிலான காலகட்டத்தை மட்டுமே கணக்கில் கொண்டதாகவும், கரோனா பெருந்தொற்று காலத்தைக் கணக்கிட்டால், எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கரோனா பொதுமுடக்க காலத்தில் லண்டனில் 43 சதவீத பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிவதாகவும், இவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தேசிய புள்ளியியல் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வில் நிரூபணம் ஆகியுள்ளது. எனவே, வீட்டில் இருந்து பணிபுரிபவர்கள் அனைவரும் போதிய நேரம் எடுத்து தங்களை ரிலாக்ஸ் செய்துவிட்டு பின்னர் பணியை தொடர வேண்டுமென உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Add your comment

Your email address will not be published.

9 + eight =