ஆக்சிஜன் சப்ளைக்கு இடையூறு ஏற்படுத்தினால் தூக்கிலிடப்படுவீர்கள்

அதிகாரிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் பகிரங்க எச்சரிக்கை

கரோனா இரண்டாம் தொற்றால் பெரும் பாதிப்பை மேற்கொண்டு வரும் இந்தியாவில், மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் வாகனங்களை வழிமறித்தால் தூக்கு தண்டனை விதிக்கப்படும் என அதிகாரிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் மருத்துவமனைகளில் நிலவும் உயிர்காக்கும் பிராணவாயு (ஆக்சிஜன்) பற்றாக்குறை குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மருத்துவமனை நிர்வாகங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை சனிக்கிழமை விசாரித்த நீதிபதிகள், பேரழிவை ஏற்படுத்திவரும் கரோனா தொற்றை சுனாமிக்கு நிகராக ஒப்பிட்டனர்.
ஹரியாணா மாநிலம் நோக்கி டெல்லி வழியாக ஆக்சிஜன் எடுத்துச் சென்ற லாரி, திடீரென மாயமானது. டெல்லி அதிகாரிகள் அந்த லாரியை இடைமறித்து, ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவும் டெல்லி யூனியன் பிரதேசத்துக்கு உள்பட்ட பகுதிக்குத் திருப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதை மிகவும் தீவிரமாக கருதிய நீதிபதிகள், ஆக்சிஜன் சப்ளைக்கு இடையூறு ஏற்படுத்தினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
இதைப்போல நாடு முழுவதும் ஆக்சிஜன் ஏற்றிவரும் லாரிகள் திருப்பிவிடப்படுவதாகவும், அதை எதிர்நோக்கிக் காத்திருக்கும் மருத்துவமனைகள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடுவதாகவும் அகில இந்திய வாயு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சாகேட் திகு தெரிவித்தார்.

டெல்லி நிலவரம் குறித்து டாக்டர் சுமித்ரா ராய் கூறியது;
ஆக்சிஜன், படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக, மருத்துவமனைக்கு வரும் சில நிமிடங்களிலேயே கரோனா நோயாளிகள் மரணம் அடைய நேரிடுகிறது. குறிப்பாக, ஒவ்வொரு மருத்துவமனையும் இதுபோன்ற பேராபத்தின் விளிம்பில்தான் இருக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால், அதை சரிசெய்ய வேறு வாய்ப்பே இல்லை. வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு, அதிகளவு ஆக்சிஜன் தேவை. ஆக்சிஜன் சப்ளை துண்டிக்கப்பட்டால், பெரும்பாலானோர் இறக்க நேரிடும் என்றார்.

டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக அட்மிஷன் நிறுத்தப்பட்டுவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. டெல்லி பத்ரா மருத்துவமனையில் குறைந்த அழுத்த ஆக்சிஜன் விநியோகம் காரணமாக ஐசியுவில் சிகிச்சை பெற்றுவந்த 20 பேர் ஒரே நாள் இரவில் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை இரவு 7 முதல் 8 மணிநேரம் வரை மருத்துவமனைக்கு ஆக்சிஜன் எடுத்துவரும் வாகனம் தாமதம் செய்ததாகவும், ஆர்டர் செய்ததில் வெறும் 40 சதவீத ஆக்சிஜன் மட்டுமே கிடைத்ததாலும் 20 பேர் உயிரிழக்க நேர்ந்ததாக பத்ரா மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் டி.கே. பகுஜா தெரிவித்தார். இதேபோல, சர் கங்காராம் மருத்துவமனையில் வியாழக்கிழமை 25 பேர் உயிரிழக்க நேர்ந்தது.

இந்தியாவில் சனிக்கிழமை ஒரே நாளில் 3,46,786 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. 2624 பேர் கரோனாவுக்கு உயிரிழந்தனர். மேற்குவங்கம், மகாராஷ்டிரம், டெல்லியில் கரோனா மும்மடங்கு பெருகிவிட்டது. இதேநிலை நீடித்தால், மே மாத முதல் வாரத்தில் இந்தியாவில் 5 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக வைரஸ் நிபுணர் ஷாகித் ஜமீல் எச்சரித்துள்ளார்.

Add your comment

Your email address will not be published.

1 × one =