சூயெல்லா பிரேவர்மன் பதவி நீக்கம் ஏன்? பரபரப்பு தகவல்
பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் சூயெல்லா பிரேவர்மன் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாட்டின் புதிய உள்துறை அமைச்சராக ஜேம்ஸ் கிளவர்லியையும், டேவிட் கேமரூனை வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பிரதமர் ரிஷி சுனக் நியமித்துள்ளார்.
இந்த நியமனங்களுக்கு அரசர் அங்கீகாரம் வழங்கியுள்ளார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவாவை பூர்விமாகக் கொண்ட சூயெல்லா பிரேவர்மன் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்ததையடுத்து, அவர் பதவியிலிருந்து அகற்றப்படுவார் என்று ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் “தி டைம்ஸ்’ இதழில் அண்மையில் வெளியான கட்டுரையில், காஸாபோர் தொடர்பான போராட்டங்களில் லண்டன் போலீஸார் பாரபட்சம் காட்டுவதாக சூயெல்லா குற்றம் சாட்டியிருந்தார்.
போலீஸôர் பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்களிடம் மென்மையாகவும், இஸ்ரேல் ஆதரவாளர்களிடம் மிகக் கடுமையாகவும் நடந்துகொள்வதாக அந்தக் கட்டுரையில் அவர் கூறியிருந்தார்.
இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரிட்டனின் சட்ட விதிகளின்படி, ஒரு அமைச்சர் பத்திரிகைகளிடம் கருத்து வெளியிடும்போது பிரதமர் அலுவலகத்தில் அது குறித்து முன்னரே தெரிவித்து அனுமதி பெறவேண்டும்.
ஆனால், அத்தகைய அனுமதியைப் பெறாமலேயே லண்டன் போலீஸôர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை சூயெல்லா வெளியிட்டுள்ளதால் அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்தே கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில், சூயெல்லா பிரேவர்மனை உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து அகற்றிவிட்டு, அவருக்குப் பதிலாக இதுவரை வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஜெம்ஸ் கிளவர்லியை அந்தப் பதவிக்கு பிரதமர் ரிஷி சுனக் நியமித்துள்ளார்.