யார் இந்த டேவிட் கேமரூன்?
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சரவையில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்.
தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள சூயெல்லா பிரேவர்மனுக்குப் பதிலாக ஜேம்ஸ் கிளவர்லியை புதிய உள்துறை அமைச்சராக பிரதமர் ரிஷி சுனக் நியமித்துள்ளார்.
கிளவர்லி வகித்து வந்த வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்புக்கு டேவிட் கேமரூன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக கடந்த 2005}ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த கேமரூன், நாட்டின் பிரதமராக 2010}ஆம் ஆண்டு பதவியேற்றார்.
அவரது ஆட்சிக் காலத்தின்போது, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிவதா (பிரெக்ஸிட்), வேண்டாமா என்பதற்கான பொதுவாக்கெடுப்பு 2016}ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.
இதில், பிரெக்ஸிட்டுக்கு எதிராக கேமரூன் பிரசாரம் மேற்கொண்டார். எனினும், பொதுவாக்கெடுப்பில் பிரெக்ஸிட்டை ஆதரித்து பெரும்பான்மானவர்கள் வாக்களித்தனர். அதனைத் தொடர்ந்து, தனது பிரதமர் பதவியை கேமரூன் ராஜிநாமா செய்தார்.
இந்த நிலையில், தற்போது பிரிட்டனின் மேலவையான பிரபுக்கள் சபையின் உறுப்பினராக இருந்து வரும் டேவிட் கேமரூன், நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக 7 ஆண்டுகளுக்குப் பிறகு நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1980களில் அப்போதைய பிரதமர் மார்கரெட் தாட்சர் அமைச்சரவையில் இருந்த பீட்டர் கரிங்டன்தான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பை வகித்த கடைசி மேலவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.