லண்டனின் அடுத்த மேயர் யார்?

பிரிட்டனில் வியாழக்கிழமை (மே 6) லண்டன் மேயர் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுவதால், இது “சூப்பர் வியாழன்’ என அழைக்கப்படுகிறது. காரணம், இந்த தினத்தில் இங்கிலாந்தில் பெரும்பாலான நகர மேயர்கள், கவுன்சிலர்கள், போலீஸ் மற்றும் குற்ற கமிஷனர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர்.

மேலும், இதே தினத்தில் வேல்ஸ், ஸ்காட்லாந்தில் பாராளுமன்ற தேர்தலும், ஹார்டில்பூல் தொகுதியில் எம்பி பதவியை ஒருவர் ராஜினாமா செய்ததால், அதற்கு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதுதவிர லண்டனில் 25 சட்டப் பேரவை உறுப்பினர்களையும் வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
இது எல்லாவற்றுக்கும் மேலாக ஐரோப்பாவில் மாஸ்கோவுக்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகை கொண்ட பாரம்பரிய தேம்ஸ் நதி பாயும் லண்டன் மாநகரின் அடுத்த மேயர் யார்? என்ற பரபரப்பு தான் அரசியல் அரங்கை தொற்றிக் கொண்டிருக்கிறது. கரோனா தொற்றைக் காட்டிலும், லண்டன் அரசியல் நிலவரம் தான் ஒட்டுமொத்த பிரிட்டனிலும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

அரசியல் பிரவேசம்:
கடந்த ஆண்டு நடைபெற இருந்த லண்டன் மேயர் தேர்தல் கரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட கால இடைவெளியை பயன்படுத்தி, நடிகர்கள், யூடியூப் அரசியல் விமர்சகர்கள் என ஏராளமானோர் அரசியல் பிரவேசம் எடுத்துள்ளனர். தற்போதைய லண்டன் மேயரான தொழிலாளர் கட்சியின் சாதிக் கான், தனது பதவியை தக்கவைத்துக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் ஷான் பைலி கடுமையான சவாலாக உருவெடுத்திருக்கிறார்.
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற மேயர் தேர்தலில் சாதிக் கான் முதல் சுற்றில் 44.2 விழுக்காடு வாக்குகளும், இரண்டாம் சுற்றில் 56.8 விழுக்காடு வாக்குகளும் பெற்று மேயர் பதவியை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
நடிகர் லாரன்ஸ் போக்ஸ்:
இந்தத் தேர்தலில் இவர்கள் இருவருக்கும் தான் பிரதான போட்டி நிகழும் என்று அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்த வேளையில், லிபரெல் டெமோக்ரேட்ஸ், க்ரீன்ஸ், ஐக்கிய ராஜ்ஜிய சுதந்திரா கட்சி ஆகிய கட்சிகளும் தங்கள் பங்குக்கு வேட்பாளர்களை நிறுத்தி, களத்தை கனமாக்கி இருக்கின்றன. இது தவிர பிரபல நடிகர் லாரன்ஸ் போக்சும் ரிக்லைம் பார்ட்டி என்ற பெயரில் கட்சியை நிறுவி, லண்டன் மேயர் தேர்தலில் களமிறங்கியிருக்கிறார்.

லண்டன் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரம்:
கிரீன் பார்ட்டி சார்பில் சியான் பெர்ரி, லண்டன் மேயருக்கான கவுன்ட் பின்பேஸ் கட்சி சார்பில் கவுன்ட் பின்பேஸ், தி பர்னிங் பிங் கட்சி சார்பில் வலரி ப்ரவ்ன், லெட் லண்டன் லிவ் கட்சி சார்பில் பியர்ஸ் கோர்பின் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதேபோல், ரிக்லைம் கட்சி சார்பில் நடிகர் லாரன்ஸ் போக்ஸ், ஐக்கிய ராஜ்ஜிய சுதந்திரா கட்சி சார்பில் பீட்டர் கேம்மோன்ஸ், ரிஜாயின் ஐரோப்பிய யூனியன் சார்பில் ரிச்சர்ட் ஹியூஸன், விலங்குகள் நல கட்சி சார்பில் வனிஷா ஹுட்சன், சோஷியல் டெமோக்ரேடிக் கட்சி சார்பில் ஸ்டீவன் கெல்லிஹர், தொழிலாளர் கட்சி சார்பில் சாதிக் கான், ஹெரிடேஜ் கட்சி சார்பில் டேவிட் குர்டென் ஆகியோர் களத்தில் இருக்கின்றனர்.
இதுதவிர லிபரல் டெமோக்ரேட்ஸ் சார்பில் லூயிஸô போர்ரிட், பெண்களுக்கான சமத்துவக் கட்சி சார்பில் மாண்டு ரிட், லண்டன் ரியல் கட்சி சார்பில் பிரையன் ரோஸ் ஆகியோரும், சுயேச்சை வேட்பாளர்களாக மாக்ஸ் போஷ், பாரா, நிம்ஸ் ஓபுங்க், நிகோ ஓமிலானா ஆகியோரும் களத்தில் நிற்கின்றனர்.
ஒட்டுமொத்தமாக லண்டன் மேயர் தேர்தலில் அரசியல் கட்சி சார்பில் 16 வேட்பாளர்களும், சுயேச்சையாக 4 பேரும் போட்டியிடுகின்றனர். இவர்களது தலைவிதியை லண்டன் மாநகர வாக்காளர்கள் இன்று வாக்குச்சீட்டு வாயிலாக தீர்மானிக்கின்றனர். தேர்தல் முடிந்ததும் மறுநாளே அதாவது வெள்ளிக்கிழமை முடிவுகள் வெளியாகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க லண்டன் நகரை ஆளப் போகும் அடுத்த மேயர் யார் என்பதை பிரிட்டன் மட்டுமன்றி ஒட்டுமொத்த ஐரோப்பாவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

15 − 9 =