பாஜகவுக்கு கானல் நீரான மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிப்பதில் முனைப்புடன் செயல்பட்டுவந்த பாஜகவுக்கு தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை அளித்திருக்கின்றன. இதனால், அங்கு ஆட்சியை பிடிக்கும் பாஜகவின் திட்டம் கானல் நீராகவே நீடிக்கிறது.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை வகிப்பது மட்டுமன்றி, ஆட்சியையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தொடர்ந்து 3ஆவது முறையாக முதல்வர் நாற்காலியை அலங்கரிக்க போகிறார்.
அதேவேளையில், அவர் களம் கண்ட நந்திகிராம் தொகுதியில் பின்னடைவை சந்தித்துவருவதாகவும், அங்கு பாஜகவின் நட்சத்திர வேட்பாளரும், மம்தா பானர்ஜியின் ஆதரவாளராகவும் கருத்தப்பட்ட சுவேந்தி அதிகாரி 1957 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, தனது இல்லத்தில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு மத்தியில் பேசிய மம்தா பானர்ஜி, இது மேற்கு வங்கத்துக்கு கிடைத்த வெற்றி என்றார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியது:
கரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்வதுதான் என்னுடைய முதன்மை பணி. இதன் மீது உடனடியாக செயல்படுவோம். ஆகையால், பதவியேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த போவது இல்லை. கரோனா எனும் புயலை எதிர்த்து போராடுவோம். அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்துவோம். இதுதொடர்பாக மத்திய அரசிடமும் கோரிக்கை விடுப்பேன். இதற்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால், கொல்கத்தா காந்தி மூர்த்தியில் தர்னாவில் ஈடுபடுவேன்.
கட்சியினர் யாரும் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம். கரோனா வீழ்த்தப்பட்டதும் வெற்றியை கொண்டாடலாம். இயல்புநிலை திரும்பியதும் பிரிகேட் பரேட் மைதானத்தில் வெற்றி கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார் மம்தா பானர்ஜி.
இதனிடையே மம்தா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் கைலாஷ் விஜயவர்கியா, தேர்தல் தோல்வி குறித்து சுய பரிசோதனை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார். முன்னதாக, பாஜகவின் தோல்வி குறித்து அவரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார்.

Add your comment

Your email address will not be published.

nine − four =