சாலையில் சாக்ஸ் விற்கும் சிறுவனிடம் வீடியோ அழைப்பில் பேசிய பஞ்சாப் முதல்வர்

 

பள்ளியில் மீண்டும் சேர்க்க நிதியுதவி

 

பஞ்சாப் மாநிலத்தில் வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டு, சாலையில் சாக்ஸ் விற்று கொண்டிருந்த சிறுவனின் ஏழ்மை நிலையை உணர்ந்து, அவனை மீண்டும் பள்ளியில் சேர்க்க உதவினார் அந்த மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங்.

 

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா மாவட்டம் ஹைபோவல் நகரை சேர்ந்த 10 வயது சிறுவன் வன்ஷ் சிங். இவனது தந்தை சாலையோரத்தில் சாக்ஸ் விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில், வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை தொடர முடியாத சிறுவன், தனது தந்தையுடன் இணைந்து சாக்ஸ் விற்கும் தொழிலில் இறங்கினான். பட்டப்பகலில் வேகாத வெயிலில் சிறுவன் சாக்ஸ் விற்பனை செய்வதை பார்த்த ஒருவர், அவனிடமிருந்து சாக்ஸ் வாங்கிக் கொண்டு கூடுதலாக ரூ.50 கொடுத்தார்.

அதை ஏற்க மறுத்த வன்ஷ் சிங், சாக்சுக்கான தொகையே போதுமானது என்று கூறி நடையைக் கட்டினான். இந்தக் காட்சியை தனது செல்போனில் வீடியோ எடுத்த அந்த நபர், சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

 

சில மணிநேரங்களில் லட்சக்கணக்கானோர் இந்த வீடியோவை பார்த்தனர், பகிர்ந்தனர். இதன் காரணமாக பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங்கின் கவனத்துக்கு அந்த வீடியோ சென்றது. அதைப் பார்த்து மனம் உருகிய அவர், உடனடியாக வன்ஷ் சிங்கை வீடியோ அழைப்பில், அழைத்து பேசினார். மேலும், வன்ஷ் சிங்கின் சுயமரியாதை, கண்ணியத்தால் தான் வெகுவாக ஈர்க்கப்பட்டதாகவும், அவனை உடனடியாக பள்ளியில் சேர்த்து அவனது படிப்பு செலவு முழுவதையும் அரசே ஏற்பதாகவும் உறுதியளித்தார்.

அத்துடன் சிறுவனின் குடும்பத்துக்கு உடனடி நிவாரணமாக ரூ.2 லட்சம் விடுவிக்குமாறு லூதியானா மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவு பிறப்பித்தார்.

Add your comment

Your email address will not be published.

three × 1 =