அமெரிக்காவில் சிறுவர்களுக்கும் தடுப்பூசி அதிபர் ஜோ பிடன் முடிவு

அமெரிக்காவில் 12 முதல் 15 வயதுக்குள்பட்ட சிறுவர்களில் 70 சதவீதத்தினருக்கு ஜூலை 4ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்த அதிபர் ஜோ பிடன் இலக்கு நிர்ணயித்துள்ளார். அதன்படி, அமெரிக்கா சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்குள் 1 கோடியே 60 லட்சம் சிறுவர்கள் தடுப்பூசியை பெற்றிருப்பர்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பிடன் கூறுகையில், இன்னும் 2 மாதங்களில் நாம் சுதந்திர தினத்தை கொண்டா இருக்கிறோம். இந்த தருணத்தில் வைரசிடம் இருந்தும் நாம் விடுதலை பெற வேண்டும். இது நம்மால் முடியும். நாம் செய்வோம் என்று சூளுரைத்தார்.
அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்ட 1 கோடியே 5 லட்சம் சிறுவர்கள் ஏற்கெனவே கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். ஒவ்வொரு நாளும் சுமார் 10 லட்சம் சிறாருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், கடந்த 3 வாரங்களுக்கு முன்பு செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையை விட தற்போது பாதியளவுதான் செலுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சர்வதேச அளவில் தடுப்பூசி திட்டத்தில் முன்னிலை வகிக்கும் இஸ்ரேலில், ஏறத்தாழ வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. இஸ்ரேலில் 60 சதவீத மக்கள் குறைந்தது ஒருதவணை தடுப்பூசியாவது செலுத்திக் கொண்டதன் விளைவாக அங்கு கரோனா தொற்றும் முழுமையாக கட்டுக்குள் வந்துவிட்டது. இந்த வேளையில், கரோனா தொற்று பாதிப்பிலும், அதனால் நிகழ்ந்த மரணங்களின் வீதத்திலும் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்கா, அந்தத் தொற்றிலிருந்து முழுமையாக விடுபடும் வகையில், தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்தி வருகிறது.

Add your comment

Your email address will not be published.

9 + 20 =