இங்கிலாந்தில் 42 வயதினருக்கும் தடுப்பூசி

 

இங்கிலாந்தில் 42 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள பதிவு செய்யலாம் என சுகாதாரத்துறை செயலாளர் மாத் ஹான்காக் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, ஜூலை 1ஆம் தேதிக்குள் 42 வயதை அடைபவர்களும் பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 42 வயதாகும் சுகாதாரத்துறை செயலாளர் மாத் ஹான்காக்கும் தனக்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில் ஆவலுடன் இருப்பாதவும், தன்னைப் போல் பிறரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இங்கிலாந்தில் 44 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவரும் நிலையில், தற்போது 42 வயதினருக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

பிரிட்டனில் இதுவரை 3 கோடியே 37 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1 கோடியே 29 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய சுகாதார சேவைகள் ஆணைய இயக்குநர் பேராசிரியர் ஸ்டீபன் போயில் கூறுகையில், தடுப்பூசி திட்டம் வெற்றி அடைந்திருப்பது திடீரென நிகழ்ந்த நிகழ்வு அல்ல. செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் எண்ணற்ற ஊழியர்களின் கடின உழைப்பாலும், பல மாத கால திட்டமிடலாலும் தான் இந்த இலக்கை அடைய முடிந்தது என தெரிவித்தார்.

வட அயர்லாந்தில் தற்போது 35}39 வயதுக்கு உள்பட்டோருக்கும், வேல்ஸ் மாகாணத்தில் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கும், ஆங்காங்கே 30 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 45 வயதை கடந்தவர்களுக்கு ஸ்காட்லாந்து அழைப்பு விடுத்திருக்கிறது.
பிரிட்டன் முழுவதும் இதுவரை கரோனா நோய்த்தொற்றால் 1,52,205 பேர் பலியாகியிருப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இதில், கடந்த ஜனவரி 19ஆம் தேதி அதிகபட்சமாக ஒரே நாளில் 1,477 பேர் பலியானதாக தகவல் வெளியானது.
கரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த காலகட்டத்தைக் காட்டிலும் தற்போது இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உயிரிழப்பு 97% வரை குறைந்திருப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Add your comment

Your email address will not be published.

thirteen − 8 =