விடுமுறை தினத்தை கழிப்பதிலும் முறைகேடு?

அடுத்த சர்ச்சையில் பிரதமர் போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரீனடின்சின் அங்கமான மஸ்டிக் தீவுக்கு தனது காதல் மனைவி கேரி சைமன்ட்ஸ் உடன் சுற்றுலா சென்றிருந்தார். இதற்கான செலவை தொழில் அதிபர் டேவிட் ரோஸ் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதை உறுதிப்படுத்திய பிரதமர், 15 ஆயிரம் பவுண்ட் மதிப்பில் தங்குமிடத்தை தான் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் தற்போது அரசியல் அரங்கில் பூதாகரமாக வெடித்துள்ளது. காரணம், பிரதமரின் சுற்றுலா செலவுக்கு தான் ஏற்பாடு செய்ததாக வெளியான தகவலை ஆரம்பத்தில் மறுத்த டேவிட் ரோஸ், பின்னர் அவருக்கு தங்குமிடத்தை மட்டும் ஏற்பாடு செய்து கொடுத்ததாக விளக்கம் அளித்தார்.

இதன் பின்னணி குறித்து கேள்வி எழுப்பிய தொழிலாளர் கட்சி துணைத் தலைவர் ஏஞ்சலோ ரெய்னர், கரீபியன் விடுமுறை தினத்தில் பிரதமர் சுகபோக வாழ்க்கை வாழ அவருக்கு செலவு செய்தது யார் என்பதையும், பிரதமரின் இல்லத்தை சீரமைக்க நிதியுதவி செய்தது யார் என்பதையும் தெரிந்துகொள்ள பொதுமக்களுக்கு உரிமை இருக்கிறது. மிக முக்கியமாக, அந்த நன்கொடையாளர்களுக்கு பிரதிபலனாக என்ன வாக்குறுதி அளிக்கப்பட்டது என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த பிரிட்டன் அமைச்சரவை, பிரதமர் ஏற்கெனவே பொது அவை பதிவேட்டில் வெளிப்படையாக இதற்கு விளக்கமளித்துவிட்டார் என்று தெரிவித்தது.
பரபரப்பான இந்த சூழலில், இந்த விவகாரம் குறித்து பொது அவை எம்.பி.க்களின் தரக் குழு தலைவர் கேத்ரின் ஸ்டோன் தலைமையில் விசாரணை தொடங்கியுள்ளது. இதனால், பிரதமருக்கு தேவையில்லாத தலைவலி ஏற்பட்டிருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

1 + eighteen =