இந்தியா- பிரிட்டன் வணிக ஒப்பந்தத்தால் 6 ஆயிரம் பேருக்கு வேலை

 

பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்

 

இந்தியா- பிரிட்டன் இடையேயான 1 பில்லியன் பவுண்ட் வர்த்தக ஒப்பந்தத்தால் பிரிட்டனில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார். இதில், பிரிட்டனில் 533 மில்லியன் பவுண்ட் மதிப்பில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்வதும் அடங்கும். இது எதிர்காலத்தில் இந்தியா- பிரிட்டன் இடையே சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தத்துக்கு வழிவகுக்கும் என பிரிட்டன் அமைச்சரவை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், இந்தியா- பிரிட்டன் இடையேயான பொருளாதாரத் தொடர்பு நமது மக்களை பாதுகாப்பாகவும், வலிமையாகவும் உணர செய்கிறது. 6,500க்கு மேற்பட்ட ஒவ்வொரு வேலைவாய்ப்பும் கரோனா தொற்றினால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்தினர் தங்களை மீண்டும் கட்டமைக்கவும், இருநாட்டு பொருளாதார உறவை மேம்படுத்தவும் உதவும் என்றார்.

பிரிட்டனில் இந்தியாவின் சீரம் மருந்து நிறுவனம் 240 மில்லியன் பவுண்ட் முதலீடு செய்து, தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய இருக்கிறது. இதற்கான முதல்கட்ட அந்நிறுவனம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இந்திய பிரதமர் மோடியும், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் காணொலி வாயிலாக விரைவில் உரையாட இருக்கும் நிலையில், இந்த வர்த்தக முதலீட்டு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

three × four =