பிரியாணி சாப்பிட்ட மூன்று பேர் உடல் நலம் பாதிப்பு
குடவாசல் முனியாண்டி விலாஸில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட மூன்று பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேருந்து நிலையத்திற்கு எதிரில் முனியாண்டி விலாஸ் அசைவ உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் நேற்று மதியம் 3:30 மணியளவில் குடவாசல் கீழ பாலையூர் கோன வாய்க்கால் தெரு பகுதியைச் சேர்ந்த வீரைய்யன் வயது 55 என்பவரும் மஞ்சக்குடி சமத்துபுரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் வயது 50 மேல உத்திரங்குடி பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் வயது 60 ஆகிய மூன்று நபர்களும் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று இரவு வீரைய்யன் முருகேசன் ராமச்சந்திரன் ஆகியோருக்கு அடுத்தடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதில் முருகேசனுக்கு நள்ளிரவில் பல முறை வயிற்றுப் போக்கு ஏற்பட்டு சுயநினைவை இழக்கும் அளவிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து குடும்பத்தினர் அவரை இரவோடு இரவாக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறப்படுகிறது.
இதில் குடவாசல் மேல உத்திரங்குடி பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் வயது 60 என்பவர் குடவாசல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற இருவரும் குடவாசல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தற்போது திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து வீரைய்யன் கூறுகையில் நேற்று மதியம் 3:30 மணியளவில் குடவாசல் முனியாண்டி விலாஸில் மூவரும் சிக்கன் பிரியாணி சாப்பிட்டோம். அப்போது பிரியாணி நொந்து போய் இருப்பது குறித்து கடைக்காரரிடம் கேட்டதற்கு நேரமாகிவிட்டதால் அவ்வாறு இருக்கிறது என்று கூறினார்கள் அதனைத் தொடர்ந்து வீட்டிற்கு சென்றவுடன் இரவு 7 மணி அளவில் தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் அதனோடு தன்னோடு சாப்பிட்ட இரண்டு பேருக்கும் அதே போன்று உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் மேலும் தனது ஊரைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவனுக்கும் முனியாண்டி விலாஸில் வாங்கப்பட்ட பார்சல் குஸ்காவை சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து குடவாசல் உணவு பாதுகாப்பு அலுவலர் மகேஷிடம் கேட்டபோது அந்த கடையில் ஆய்வு நடத்தியதாகவும் உணவு மாதிரி ஏதும் கிடைக்கவில்லை என்றும் கடையை பொருத்தவரைக்கும் சுகாதாரமாக இருந்ததாகவும் சுகாதார குறைபாடு போன்றவை இல்லை என்றும் சமைப்பதற்காக வாங்கப்பட்ட சிக்கன் போன்றவை சுகாதரமாக இருந்ததாகவும் மகேஷ் தெரிவித்தார். மேலும் இது குறித்து வீரையன் குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.