காலநிலையை தெளிவாக கணிக்கும் சூப்பர் கம்ப்யூட்டர் பிரிட்டனில் அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வருகிறது

காலநிலையை தெளிவாக கணிக்கக்கூடிய சூப்பர் கம்ப்யூட்டர் வடிவமைப்பில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் மும்முரமாக பணியாற்றி வருகிறது. காலநிலையை முன்கூட்டியே தெளிவாக வரையறுப்பதற்கும், இன்றைக்கு உலகையே அச்சுறுத்தும் பருவநிலை மாறுபாட்டை நன்கு புரிந்து கொள்ளவும் தேவையான தரவுகளை இந்த சூப்பர் கம்ப்யூட்டர் அளிக்கவல்லது.

இந்தத் திட்டத்தில் 1.2 பில்லியன் பவுண்ட் முதலீடு செய்யப் போவதாக பிரிட்டன் அரசு ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்திருந்தது. அடுத்த ஆண்டு கோடை காலத்தில் இந்த கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில், உலகிலேயே தலைசிறந்த 25 சூப்பர் கம்ப்யூட்டர் வரிசையில் இதுவும் இடம்பெறும் என பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் பெருமிதத்துடன்குறிப்பிட்டுள்ளது.

மேலும், பருவநிலை மாற்றம் குறித்த புரிதலை இந்தத் தொழில்நுட்பம் அதிகப்படுத்தும் என்றும், அதற்கேற்றவாறு திட்டமிட்டுக் கொள்ள பொதுமக்களை அறிவுறுத்துவதற்கு இது உதவிகரமாக இருக்கும் என்றும் பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த கம்ப்யூட்டரை பத்தாண்டுக்கு ஒரு முறை திறன் மேம்பாட்டுக்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் அப்டேட் செய்ய தீர்மானித்திருக்கிறது.

அடிப்படை மற்றும் பயன்பாட்டு அறிவியலிலும், காலநிலையை கணிப்பதிலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் கைகோர்த்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த முதலீடு என ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் மோர்கன் ஓநெயில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரிட்டனின் இந்த முதலீடு, உலக நாடுகளுக்கு மிகப்பெரிய செய்தியை தாங்கிச் செல்வதாகக் கூறிய அவர், இதன்மூலம் ஏற்படும் அறிவியல்பூர்வ நலன்களை தானும் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

உலகில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் கம்ப்யூட்டர்களை விட 6 மடங்கு செயல்திறன்மிக்க இந்த கம்ப்யூட்டர், காலநிலை மாதிரி தொடர்பான தெளிவான தகவல்களை அளிக்கவல்லது. கடுமையான வானிலை சூழலிலும் திறம்பட செயலாற்றும் திறன்வாய்ந்தது. இதேபோல, கடுமையான காலநிலையையும் துல்லியமாக கணிக்கும் திறன்வாய்ந்தது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய சிஇஓ பென்னி என்டர்ஸ்பி கூறும்போது, இணைந்து செயல்படும்போது பருவநிலை தொடர்பான உயர்தர தரவுகளையும், பொதுமக்களின் பாதுகாப்புக்கான துல்லிய கணிப்புகளையும் நம்மால் வெளியிட இயலும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், பருவநிலை அறிவியலில் உலக நாடுகளுக்கு பிரிட்டன் முன்னோடியாக திகழ சூப்பர் கம்ப்யூட்டர்கள் உதவிகரமாக இருக்கும் என்று பிரிட்டனுக்கான மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ கிளேர் பார்கிளே தெரிவித்திருக்கிறார்.

Add your comment

Your email address will not be published.

fourteen − 3 =