திறமையான ஆசிரியர்கள் கொண்ட அரசு பள்ளியில் படிக்க வேண்டும்
நல்ல திறமையான ஆசிரியர்கள் கொண்ட அரசு பள்ளியில் மாணவர்கள் விரும்பி வந்து படிக்க வேண்டும் என புணரமைக்கப்பட்ட அரசு பள்ளி கட்டிட திறப்பு விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.
முதல் பெஞ்சைவிட கடைசி பெஞ்சில் உட்கார்ந்துள்ள மாணவர்களில் தான் நிறைய திறமையான மாணவர்கள் உள்ளனர் என துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசினார்.
புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளி பிரெஞ்சு கட்டிடக்கலை வடிவமைப்பை கொண்டு 1885 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 135 ஆண்டுகள் செயல்பட்டு வந்த இந்த பள்ளி கட்டிடமானது பராமரிப்பு குன்றியதால் பழுந்தடைந்து காணப்பட்டது. இதனை அடுத்து 3 கோடி ரூபாய் செலவில் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
புதுச்சேரி பொலிவுறு நகர திட்டத்தின் மூலம் பழமை மாறாமல் புனரமைப்பப்பட்ட வ.உ.சி அரசு பள்ளியினை கல்வித்துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்வு வ.உ.சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து புணரமைக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை மாணவர்களுக்கு ஒப்படைத்தார்.
அதே போல் இந்நிகழ்வில் முதலமைச்சர் மற்றும் துணைநிலை ஆளுநர் அலுவலகங்களுக்கு தகவல் பலகை அறிமுகப்படுத்துதல், புயல் எச்சரிக்கை செயலி (சீற்றம்) அறிமுகம் செய்தல், பொதுப்பணி துறை புதுச்சேரி அரசு மற்றும் இந்தியன் வங்கி இடையே சாலையை மேம்படுத்த நிதி வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றது. இவ்விழாவில் சபாநாயகர் செல்வம், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லஷ்மிநாராயணன், தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா மற்றும் அதிகாரிகள், வ.உ.சி அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரயர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி என்றால் பழமையான கட்டிடம் என அனைவரும் விரும்பி பார்க்க வருகின்றனர். 75 கட்டிடங்களை பழமை மாறாமல் அப்படியே புனரமைத்து வருகின்றோம் என்றும், புதுச்சேரியில் பழமையான கட்டிடங்கள் இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். பெரும்பாலான புதுச்சேரியை சேர்ந்தவர்கள் சிறந்த கல்வியாளர்கள், புலவர்கள், அதிகாரிகளாக இருப்பவர்களை கேட்டால் வஉசி பள்ளி என்று தான் கூறுவார்கள். அதே போல் கல்வி கல்லூரியில் படித்தவர்களும் பெரிய இடத்தில் உள்ளனர்.
பல்வேறு அறிஞர்களை உருவாக்கிய பள்ளி இந்த வஉசி பள்ளி. பழமை மாறாமல் கட்டிடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், புனரமைக்க வேண்டும் என்பது தான் அரசு எண்ணம் என்றும், அரசு பள்ளி இருக்கிறது. ஆனால் சின்ன குறை உள்ளது. சிறந்த அரசு பள்ளி கட்டிங்கள் உள்ளது. ஆனால் பராமரிக்கவில்லை. எனவே அரசு பள்ளிகளை பராமரித்து சிறந்த கழிவறைகளுடன் இருக்க வேண்டும் என அரசு முடிவு எடுத்துள்ளது.
பள்ளிகளிலும் சரி மருத்துவமனைகளிலும் சரி ஊழியர்கள் சரியக பணியாற்ற வேண்டும். ஆனால் சரியாக பணி செய்வதில்லை என்றும், நல்ல ஆசிரியர்கள் கொண்ட அரசு பள்ளியில் மாணவர்கள் விரும்பி வந்து படிக்க வேண்டும். அரசு பள்ளியை மேம்படுத்து அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என கூறினார்.
அதனை தொடர்ந்து பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு பட்ஜெட்டில் 12% நிதி ஒதுக்கப்பட்டுள்ளது புதுச்சேரியில் தான் என்றும், புதுச்சேரியில் எந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டாலும் நிர்ணயித்த தேதிக்குள் முடிக்கப்படும் என்பதற்கு இந்த விழா உதாரணம். மாணவர்கள் மிகப்பெரிய அடிப்படையை நமது அரசாங்கம் செய்து கொடுக்கிறது.
மாணவர்கள் பாடபுத்தகத்தை படிப்பது போல், பொது அறிவு, சுதந்திர போராட்ட தியாகிகள் புத்தகத்தை படிக்க வேண்டும் என கூறினார். மேலும் முதன் முதலில் கப்பலோட்டிய தமிழன் என கூறிய வ உசி பெயர் கொண்ட பள்ளி இது. இவர் பெயர் போல் நீங்கள் வர வேண்டும். முதல் பெஞ்சில் உட்காருபவர்களை விட கடைசி பெஞ்சில் உட்கார்ந்துள்ள மாணவர்களில் தான் அதிக ஜீனியர்ஸ் உள்ளனர்.
எனவே அனைவரையும் படிக்க வைக்க வேண்டும்்என்றும், அரசு பள்ளி மாணவர்களில் நிறைய பேர் திறமையானவர்களாக உள்ளனர். அரசு பள்ளி மாணவர்களை ஆளுநர் மாளிகையில் அழைத்து பேசும் போது தான் உணர்ந்தேன் என கூறினார்.