ஆக்சிஜன் விநியோகத்தை தொடங்கியது ஸ்டெர்லைட் ஆலை

வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, மருத்துவ தர நிலையிலான ஆக்சிஜனை திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு அனுப்பிவைத்தது.

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் தாமிரத்தால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுவதாக எழுந்த புகாரின்பேரில், அந்நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு சீல் வைக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் கரோனா பரவல் காரணமாக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால், அதை ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள பிளாண்டில் தயாரித்து இலவசமாக விநியோகிக்க வேதாந்தா நிறுவனம் முன்வந்தது. இதற்காக உச்சநீதிமன்றக் கதவையும் அந்நிறுவனம் தட்டியது.

நிலைமையை உணர்ந்த உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி அளிக்குமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. அதன்பேரில், ஸ்டெர்லைட் ஆலை 4 மாதத்துக்கு மட்டும் செயல்படவும், ஆக்சிஜன் தயாரிப்புக்கு மட்டுமே அதன் உள்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தவும் தமிழக அரசு அனுமதியளித்தது. இதைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது. இதன்பேரில், ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திப் பணி கடந்த வாரம் தொடங்கியது. வியாழக்கிழமை காலை 7 மணியளவில் முதல்கட்டமாக 4.8 டன் மருத்துவத்துக்கான ஆக்சிஜன், டேங்கர் லாரி மூலம் திருநெல்வேலி ஹைகிரவுண்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டது. இப்பணியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எஸ். செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

 

இதுதொடர்பாக ஸ்டெர்லைட் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ஆரம்பத்தில் தினசரி அடிப்படையில் இரண்டு ஆக்சிஜன் டேங்கர்களை நாங்கள் அனுப்பிவைக்கிறோம். உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க ஆக்சிஜன் விநியோகத்தையும் படிப்படியாக உயர்த்துவோம். ஸ்டெர்லைட் ஆலை விநியோகிக்கும் ஆக்சிஜன் 98.06 சதவீதம் தூய்மைவாய்ந்தது. தேவையான மருத்துவ தரச் சான்றிதழையும் நாங்கள் பெற்றிருக்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஸ்டெர்லைட் ஆலையும், தங்கள் முயற்சியும் நேரடியாக உயிர்காக்கும் சேவையில் ஈடுபட்டிருப்பதை தாங்கள் பெருமையாக நினைப்பதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பங்கஜ்குமார் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

two × 2 =