தொடங்கியது பிரமாண்ட தேர்தல்

 

பிரதமர் போரிஸ் ஜான்சன் வாக்களித்தார்

2019 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இன்று (வியாழக்கிழமை) பிரிட்டனில் நடைபெறும் பிரமாண்ட தேர்தலில் கோடிக்கணக்கான வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். லண்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

ஸ்காட்லாந்து பாராளுமன்றம், வேல்ஸ் செனட் சபை, இங்கிலாந்தில் லண்டன் உள்பட 13 நகர மேயர் பதவிகள், 143 கவுன்சில்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஹார்டில்பூலில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் எம்பி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 10 மணிக்கு நிறைவடைகிறது. மொத்தம் 4 கோடியே 80 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
லண்டன் நகர மேயர் தேர்தல் முடிவு சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குப் பதிவு மையங்கள் முழுவதும் கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதால், வாக்காளர்கள் வாக்குச் சீட்டில் வாக்களிக்க ஏதுவாக பென்சில் கொண்டு வருமாறு தேர்தல் ஆணைய தலைவர்கள் அறிவுறுத்தினர்.
மேலும், வாக்குப்பதிவு மையத்துக்குள் முக்கவசம் அணிந்து செல்வது, கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்வது, ஒருவழிப் பாதையை பயன்படுத்துவது, சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிப்பது என கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன. வாக்காளர்கள் வரிசையில் வருவதை ஒழுங்குபடுத்தும் பணியிலும் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் வாக்களித்தார்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் லண்டன் மெத்தடிஸ்ட் சென்ட்ரல் வாக்குச்சாவடியில் தனது மனைவி கேரி சைமண்ட்ஸ் உடன் வந்து வாக்களித்தார். லண்டன் நகர முன்னாள் மேயரான அவர், இதற்காக காலை 8 மணிக்கு முன்பாகவே வாக்குச் சாவடிக்கு வந்தார். பின்னர், வாக்குச்சாவடியை விட்டு வெளியே வந்ததும், அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களை பார்த்து கையசைத்தார். தொடர்ந்து, தனது காரில் ஏறிச் சென்றார்.
லண்டன் தவிர இங்கிலாந்தில் மேலும் 12 நகர மேயர் பதவிகளுக்கும் வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Add your comment

Your email address will not be published.

eighteen + 12 =