ஸ்பெயினில் பிரிட்டன், ஜப்பான் பிரஜைகளுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்

 

பிரிட்டன், ஜப்பான் பிரஜைகள் ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலா வருவதில் எந்தவித தடையும் இல்லை என்று அந்நாடு தெரிவித்துள்ளது. வரும் திங்கள்கிழமை (மே 24) முதல் இந்த அறிவிக்கை அமலுக்கு வருகிறது.

மேலும், பிரிட்டன், ஜப்பான் பயணிகள் ஸ்பெயின் செல்லும்போது, கரோனாவுக்கான பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதேவேளையில், ஸ்பெயின் சென்று திரும்பும் பிரிட்டன் பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதற்கான விதிமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்று பிரிட்டன் அறிவித்திருக்கிறது.

இதனிடையே, பிரிட்டனில் இந்திய வகை கரோனா அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், அங்கிருந்து ஜெர்மனிக்கு வருபவர்கள் இரண்டு வார காலம் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஜெர்மனி அறிவித்தது. ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு அவசியமின்றி பயணிக்க வேண்டாம் என பொதுமக்களை பிரிட்டன் அரசு கேட்டுக் கொண்டது.

 

போர்ச்சுகல் தேசத்தை பிரிட்டன் பச்சை பட்டியலில் வைத்ததால், பிரிட்டன் மக்கள் விடுமுறையை இன்பமாக கழிக்க போர்ச்சுகல் நோக்கி கடந்த திங்கள்கிழமை முதல் படையெடுத்து வருகின்றனர். ஐரோப்பிய யூனியன் நாடுகளில், ஆஸ்திரேலியா, இஸ்ரேல், நியூஸிலாந்து, ருவாண்டா, சிங்கப்பூர், தென்கொரியா, தாய்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் சுதந்திரமாக நடமாடலாம். இந்த நாடுகள் அனைத்தும் ஐரோப்பிய யூனியனின் வெள்ளை பட்டியலில் இருக்கின்றன. இந்த பட்டியலை மேலும் விரிவுபடுத்த ஐரோப்பிய யூனியன் ஆலோசனை நடத்தி வருகிறது.

ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் சுற்றுலாத்துறை பெரும்பாலும் பிரிட்டன் சுற்றுலா பயணிகளை நம்பியே இருப்பது கூடுதல் தகவல்.

Add your comment

Your email address will not be published.

one × five =