லண்டனில் 2ஆவது முறையாக அரியணை ஏறுகிறார் சாதிக் கான்

 

 

லண்டன் மேயர் தேர்தலில் தொழிலாளர் கட்சி வேட்பாளர் சாதிக் கான் 2,28,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக தொடர்ந்து அந்த பதவியை அலங்கரிக்க போகிறார்.

 

லண்டன் மேயர் தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. தற்போது வாக்குகள் எண்ணிக்கை முடிவடைந்து தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது. இதில், தொழிலாளர் கட்சி வேட்பாளர் சாதிக் கான் 12,06,034 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் ஷான் பெய்லி 9,77,601 வாக்குகள் பெற்றார். இதனால், 2,28,000 வாக்குகள் வித்தியாசத்தில் லண்டன் மேயர் பதவியை மீண்டும் கைப்பற்றினார் சாதிக் கான்.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற மேயர் தேர்தலில் இதே சாதிக் கான் 13,10,143 வாக்குகள் பெற்று 3,15,529 வாக்குகள் வித்தியாசத்தில் கன்சர்வேடிவ் வேட்பாளர் ஜாக் கோல்ட்ஸ்மித் என்பவரை வென்றிருந்த நிலையில், மீண்டும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

பொதுவாக மேயர் உள்ளிட்ட பதவிகளின் காலவரையறை 4 ஆண்டுகள் ஆகும். இந்நிலையில், கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட காரணத்தால், நிகழாண்டுமுதல் கணக்கில் கொள்ளப்பட்டு மேயர் பதவி வகிக்கும் நபர் அடுத்த 3 ஆண்டுகள் அப்பதவியில் நீடிப்பர். கரோனா தொற்றால் பதவிக் காலத்தில் ஓராண்டு குறைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த பிரமாண்டமான வெற்றியை பணிவுடன் ஏற்பதாக தெரிவித்த சாதிக் கான், பிரெக்ஸிட், கரோனா, கலாசார போர் ஆகியவற்றால் பிரிட்டனில் ஏற்பட்ட ஆழமான பிளவை பிற பகுதி தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாக தெரிவித்தார். மேலும், லண்டன் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தொழிலாளர் கட்சி வேட்பாளர் சாதிக் கானுக்கு, அவரை எதிர்த்து களம்கண்ட கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் ஷான் பெய்லி வாழ்த்து தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

20 − nine =