பல்கலைக்கழகங்கள் மீது பெண்கள் சரமாரி குற்றச்சாட்டு

பாலியல் குற்றச்சாட்டுகள் புறக்கணிப்பு

பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிகள் சந்திக்கும் பாலியல் பிரச்னைகளை தீர்த்துவைக்க பல்கலைக்கழகங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதில் முறையான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டுமெனவும் கோரி, 15 பெண்கள் கையெழுத்திட்டு அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

மேலும், தாங்கள் சந்தித்த இன்னல்களை குறிப்பிட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிய கடிதங்கள் தவறாக கையாளப்பட்டதாகவும் அதில் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து இந்தக் கடிததத்தை எழுதிய 15 பேரில் ஒருவரான நீத் பகுதியை சேர்ந்த சமந்தா கில்போர்டு (வயது 23) கூறியதாவது;
வெஸ்ட் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் நான் முதலாமாண்டு சேர்ந்தபோது, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். அதற்கான விசாரணை ஓராண்டு காலம் நீடித்தது. விசாரணையை பல்கலைக்கழகத்தினர் தேவையில்லாமல் நீட்டித்துக் கொண்டு போனதையும், மூடி மறைத்ததையும் என்னால் உணர முடிந்தது. மேலும், நான் புகாரை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர்கள் விரும்பினர். இதன்மூலம் அவனை பாதுகாக்க அவர்கள் முயன்றனர். விசாரணையின்போது, என்னிடம் கேள்வி கேட்கவும் அவனை அனுமதித்தனர். விசாரணையில் நான் சொன்ன அனைத்தையும் அவன் அறிந்துவைத்திருந்தான். ஆனால், அவனது பதில் எனக்கு தெரிவிக்கப்படவில்லை. இதில் மிகவும் விரும்பத்தகாத விஷயம் என்னவென்றால், அந்த விசாரணையின் இறுதி நிலவரம் என்ன ஆனது என்பது பற்றி எனக்கு இன்னும் தெரியாது என்பதுதான் என்றார் அவர்.
அந்தக் கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது;
ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் பாலியல் புகார்களை விசாரிக்க நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர் நியமிக்கப்பட வேண்டும். புகார்தாரரின் வாக்குமூலம் முழுமையாக, குற்றம்சாட்டப்பட்ட நபரின் குறுக்கீடு இன்றி கேட்கப்பட வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட நபர், புகார்தாரரை சந்தித்து பேச அனுமதியளிக்கக் கூடாது. சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் விசாரணையின் முடிவு தெரிவிக்கப்பட வேண்டும். விசாரணையை பல்கலைக்கழக நிர்வாகங்கள் இழுத்தடிக்கக் கூடாது. அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட 3 மாதத்தில் முடிவு எடுத்தாக வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Add your comment

Your email address will not be published.

two × 2 =