தமிழ்நாடு பாஜகவின் தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக வலைதளப் பிரிவு தலைவராக இருந்து வந்த சி.டி.நிர்மல் குமார் மார்ச் 5ம் தேதி தனது பதவியை ராஜினமா செய்து விட்டு அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து அவர் வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. அவரையடுத்து, பாஜக ஐடிவிங் மாநில செயலாளர் உள்பட பலரும் அக்கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
இதையடுத்து, தமிழ்நாடு பாஜகவின் ஐடி விங் தலைவராக சவுக்கு சங்கரை நியமிப்பதாக அண்ணாமலை கையெழுத்திட்ட அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
அந்த அறிக்கையில், ” தமிழக பாஜக தொண்டர்கள் அனைவருக்கும் மாநிலத் தலைமையின் அன்பு வேண்டுகோள். கடந்த சில தினங்களாக தமிழக பாஜகவில் நிகழும் மாற்றங்கள் மன வேதனையை ஏற்படுத்துகின்றன. நான் எங்கோ ஓர் கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தேன். பாஜகதான் என்னை இந்த நாற்காலியில் அமர வைத்தது. எனக்கு கட்சியின் கொள்கைகளோ கோட்பாடுகளோ தெரியாது. அதைத் தெரிந்துகொள்ள வேண்டிய நேரமோ அவசியமோ எனக்கு இல்லை என்றே கருதுகிறேன். எனது தலைமையை வெறுத்து, கட்சியில் இருந்து வெளியேற விரும்பும் நபர்கள் தாரளமாக வெளியேறிக்கொள்ளுங்கள். ஏற்கனவே வெளியேறியவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க.
பதவியில் இருந்து வெளியேறிய நபர்களின் இடத்திற்குப் புதிய பொறுப்பாளர்களை நியமிக்கவேண்டிய நிபந்தத்தில் கட்சி உள்ளது. அதனடிப்படையில் தமிழக பாஜக ஐடி விங் தலைவராக அனைவரும் அறிந்த முகமான பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் மற்றும் ஐடி விங் மாநில செயலாளராக பிரதீப் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர் என்பதை இந்த அறிக்கை வாயிலாக தலைமை தெரிவித்துக்கொள்கிறது ” என இடம்பெற்று இருக்கிறது.
சவுக்கு சங்கர் ஐடி விங் தலைவராக நியமிக்கப்பட்டாரா எனத் தேடுகையில், தமிழ்நாடு பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் அப்படி எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. திருப்பூர் சம்பவத்தில் தமிழ்நாடு காவல்துறை என்ன செய்தார்கள் என்பதை சிபிஐ விசாரணை வேண்டும் என மார்ச் 5ம் தேதியிட்ட பத்திரிகை செய்தியே இறுதியாக வெளியாகி இருக்கிறது.
வைரல் செய்யப்படும் போலியான அறிக்கை தொடர்பாக மறுப்பு தெரிவித்தும், திமுக ஐ.டி விங்-கிற்கு நன்றி கூறியும் சவுக்கு சங்கர் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக அறியப்படும் சவுக்கு சங்கர், தமிழ்நாடு பாஜக ஐடி விங் முன்னாள் தலைவர் சி.டி.நிர்மல் குமார் அவர்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
GIPHY App Key not set. Please check settings