‘சாதிக்கும்’ சாதிக் கான்: 25 ஆயிரம் வாக்குகள் முன்னிலை

லண்டன் மேயர் தேர்தல்:

லண்டன் மேயர் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் ஷான் பெய்லியை விட தொழிலாளர் கட்சி வேட்பாளர் சாதிக் கான், ஏறத்தாழ 25 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று இலக்கை நோக்கி விரைந்து பயணிக்கிறார். அதேவேளையில், அரசியல் விமர்சகர்களின் கருத்தை தவிடுபொடியாக்கி, ஷான் பெய்லியும் சாதிக் கானுக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக புறநகர் பகுதிகளில் கணிசமான தொகுதிகளில் ஷான் பெய்லி அதிக எண்ணிக்கையில் வாக்கு பெற்றிருக்கிறார்.
வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி வரையிலான நிலவரப்படி, 14 தொகுதிகளில் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், சாதிக் கான் 4,87,104 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த ஷான் பெய்லி 4,62,837 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார். இருவருக்கும் இடையே ஆன வாக்குகள் வித்தியாசம் 24,267 ஆகும். இந்தக் கடினமான இலக்கை ஷான் பெய்லியால் முறியடிப்பது சுலபம் அல்ல என்று கூறும் அரசியல் விமர்சகர்கள், சாதிக் கான் மீண்டும் லண்டன் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கருத்து தெரிவிக்கின்றனர்.
மீதமுள்ள தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிமுதல் எண்ணப்படுகின்றன. இன்று மாலை இறுதி முடிவு அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை கரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக தேர்தல் பணியில் தொய்வு ஏற்படும்பட்சத்தில், முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை காலை வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Add your comment

Your email address will not be published.

four × four =