வேல்ஸ் கால்பந்து அணி பயிற்சியாளர் ரியான் கிக்ஸுக்கு 5 ஆண்டுகள் சிறை?

முன்னாள் காதலியை தாக்கிய வழக்கு

தனது முன்னாள் காதலி உள்பட 2 பெண்களை தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டில், வேல்ஸ் கால்பந்து அணி பயிற்சியாளரும், முன்னாள் கால்பந்து வீரருமான ரியான் கிக்ஸுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தீர்ப்பு வரும் புதன்கிழமை வெளியாகிறது.

வேல்ஸ் கால்பந்து பயிற்சியாளரான 47 வயது ரியான் கிக்ஸை அவரது மனைவி ஸ்டேசி கடந்த 2016இல் விவாகரத்து செய்தார். ரியான் கிக்ஸின் சகோதரர் ரோட்ரியின் மனைவி நடாஷாவுடன், ரியானுக்கு 8 ஆண்டுகள் தொடர்பு இருந்தது தெரியவந்ததையடுத்து, இந்த முடிவை ஸ்டேசி எடுத்தார். இதைத்தொடர்ந்து, தனது கால்பந்து ஹோட்டலில் மக்கள்தொடர்பு நிர்வாகியாக பணிபுரிந்துவந்த கேட் கிரேவில் என்ற 36 வயது பெண்ணுடன் ரியானுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் முதல் கடந்த ஆண்டு நவம்பர் வரை நெருங்கிப் பழகினர். ஜோடியாக பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர். இந்தக் காலகட்டத்தில் கேட் கிரேவிலை ரியான் கிக்ஸ் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்து, உடல் ரீதியாக கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுமட்டுமன்றி, ரியான் கிக்ஸ் இதே பாணியில் மற்றொரு பெண்ணையும் அச்சுறுத்தியதாக புகார் எழுந்தது. இங்கிலாந்தில், பிறரை அச்சுறுத்தினாலோ அல்லது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலோ அது குற்றம் என கடந்த 2015இல் வரையறுக்கப்பட்டு, 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டின்கீழ் ஸ்வின்டர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு நவம்பரில் ரியான் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரது ஜாமீன் மே 1 வரை நீட்டிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், குற்றச்சாட்டை பதிவு செய்வதற்காக மான்செஸ்டரில் உள்ள தனது இல்லத்திலிருந்து ஸ்வின்டன் காவல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ரியான் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, பெரிய சூட்கேஸ் ஒன்றை கையில் வைத்திருந்த அவர், வெள்ளை சட்டையும் கருப்பு நிற மாஸ்க்கும் அணிந்து காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்திருந்தார். மான்செஸ்டர் காவல் நிலையத்தை 3.25 மணிக்கு அடைந்த அவர், சுமார் 20 நிமிடங்கள் அங்கே இருந்தார். அப்போது, அவர் மீதான குற்றச்சாட்டுகளை காவல் துறையினர் வாசித்தனர். இதையடுத்து, அங்கிருந்து 3.45 மணிக்கு வெளியே வந்த ரியான், அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.
இந்த 2 குற்றச்சாட்டின்கீழ் அவருக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை மான்செஸ்ட்ர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்றும், புதன்கிழமை தீர்ப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்து ரியான் கூறியது;
என் மீதான குற்றச்சாட்டின் தீவிரத்தன்மையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. சட்டத்தின்மீது எனக்கு முழு மதிப்பு இருக்கிறது. நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்து வழக்கிலிருந்து விடுபடுவேன் என்றார்.
மேலும், ஐரோப்பிய கோடைக்கால கால்பந்து போட்டியில் பங்கேற்கும் வேல்ஸ் அணிக்கும், அதன் பயிற்சியாளர் ராபர்ட் பேஜுக்கும் ரியான் வாழ்த்து தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

nineteen − 8 =