கரோனா கால ஒப்பந்தங்களை வெளிப்படுத்தவும்

அமைச்சர்களுக்கு தொழிலாளர் கட்சி வலியுறுத்தல்

கரோனா பெருந்தொற்று காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வென்டிலேட்டர்களுக்கான ஒப்பந்த விவரங்களை வெளியிடுமாறு பிரிட்டன் அமைச்சர்களுக்கு தொழிலாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரிட்டனில் கரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது அதைக் கட்டுப்படுத்துவதற்காக பிபிஇ கிட் பாதுகாப்பு உபகரணங்களையும், வென்டிலேட்டர்களையும் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் வாயிலாக அரசு கொள்முதல் செய்தது. வழக்கமாக டெண்டர் முறையில் நடைபெறும் இந்தக் கொள்முதல், அவசரநிலை கருதி ஒப்பந்தம் வாயிலாக நடைபெற்றது.
இதில், பிரிட்டன் அமைச்சர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, தங்களுக்கு வேண்டிய தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்ததாக குற்றம்சாட்டிய தொழிலாளர் கட்சி, கரோனா தொற்று காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த விவரங்களையும், தொழில் நிறுவனங்களுடனான அமைச்சர்களின் பிணைப்பையும் வெளியிடுமாறு வலியுறுத்தியுள்ளது.
ஏற்கெனவே வரி விதிப்பு தொடர்பாக தொழில் அதிபர் ஜேம்ஸ் டைசன், பிரதமருக்கு நேரடியாக மெசேஜ் அனுப்பியதும், அதில் அவருக்கு சாதகமாக பிரதமர் பதில் அனுப்பியது தகவலும் கடந்த வாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், தற்போது தொழிலாளர் கட்சி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

Add your comment

Your email address will not be published.

four × 1 =