சிங்கப்பூர் விமானங்களுக்கு தடை விதியுங்கள்

அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

சிங்கப்பூரில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள கரோனா வகை குழந்தைகளை அதிக அளவில் பாதிப்பதால், அந்நாட்டின் உடனான விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டுமென டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசை வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “”சிங்கப்பூரில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்க கூடியது என கூறப்படுகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் 3ஆவது கரோனா அலையை தூண்டிவிடும் வல்லமைமிக்கது. எனவே, சிங்கப்பூர் உடனான அனைத்து விமான சேவையையும் உடனடியாக முடிவுக்கு கொண்டு, குழந்தைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார், கெஜ்ரிவால்.
இதனிடையே, டெல்லியில் திங்கள்கிழமை 8.42% ஆக கரோனா பரவல் வீதம், செவ்வாய்க்கிழமை 6.89% ஆக குறைந்தது. இதேபோல், இறப்பு எண்ணிக்கையும் 340லிருந்து 265 ஆக குறைந்தது. டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 4,482 பேருக்கு கரோனா உறுதியானது. மருத்துவமனைகளில் மொத்தமுள்ள படுக்கைகளில், 24,305 படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், 9,906 படுக்கைகள் காலியாக இருக்கின்றன.

Add your comment

Your email address will not be published.

18 − 2 =