பிரிட்டன் பிரதமருக்கு சிகிச்சையளித்த செவிலியர் ராஜினாமா

 

அரசின் மீது பகிரங்க குற்றச்சாட்டு

 

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஆண்டு கரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவருக்கு சிகிச்சையளித்து, அவர் உயிர்பிழைக்க காரணமாக இருந்த செவிலியர் ஜென்னி மெக்ஜி, தனது பணியை ராஜினாமா செய்திருக்கிறார். இதுமட்டுமன்றி, செவிலியர்களுக்கு போதுமான மரியாதை அளிக்கப்படவில்லை என்றும், உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூஸிலாந்தை சேர்ந்தவர் ஜென்னி மெக்ஜி. திருமணமாகாத இவர், லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். இந்த மருத்துவமனையில் கடந்த ஆண்டு கரோனா பாதிப்புக்குள்ளான பிரதமர் போரிஸ் ஜான்சன் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவருக்கு சிகிச்சையளித்த 6 பேர் கொண்ட செவிலியர் குழுவில், மெக்ஜியும் இடம்பெற்றிருந்தார். இவர்களது அயராத சேவை காரணமாக கரோனாவிலிருந்து குணமடைந்த பிரதமர், இரவு முழுவதும் தனது அருகே இருந்து தனக்கு சிகிச்சையளித்த செவிலியர்கள் மெக்ஜி, லூயிஸ் பிதர்மா ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டு அவர்களுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். அத்துடன், தேசிய சுகாதார சேவை பணியாளர்களின் 72ஆவது ஆண்டுவிழாவையொட்டி, அவர்களை கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனது அதிகாரபூர்வ இல்லத்துக்கு அழைத்து விருந்தும் அளித்து கௌரவித்தார் பிரதமர்.

இந்தநிலையில், தனது பணியை ராஜினாமா செய்து மருத்துவமனை நிர்வாகத்துக்கு மெக்ஜி கடிதம் அனுப்பியிருப்பது மருத்துவ வட்டாரத்தில் மட்டுமன்றி, அரசு நிர்வாகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக சேனல் 4 ஆவணப்படத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது;

கரோனாவுக்கு எதிரான போரில் எங்களை முன்வரிசையில் நிறுத்தி, உண்மையிலேயே நாங்கள் கடுமையாக உழைத்தோம். இதனால், எங்களை ஹீரோக்களுக்கு நிகராக பொதுமக்கள் தூக்கிவைத்து கொண்டாடினார்கள். ஆனாலும், எங்களுக்கு உரிய மரியாதையோ, ஊதியமோ அளிக்கப்படுவதில்லை. இதனால் நான் மிகவும் பாதிக்கப்படுகிறேன். எனவேதான் ராஜினாமா கடிதம் கொடுத்தேன். கடந்த ஆண்டு ஏப்ரலில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரை சுற்றிலும் பிற நோயாளிகள் இருந்தனர். அதில் சிலர் உயிரிழந்தனர். எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது. பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயம், மிகவும் பலவீனமாக இருந்தார். வித்தியாசமான நிறத்திலும் தோற்றமளித்தார்.

அப்போது ஏராளமானோர் கரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், என்ன நடக்கின்றது என்பதே எங்களுக்கு தெரியவில்லை. அது எங்களுக்கு மிகவும் சோதனையான காலகட்டமாக இருந்தது என்றார் மெக்ஜி.

இதேபோல், அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது;

என்னுடைய செவிலிய பணியில், கடினமான ஆண்டை எதிர்கொண்ட பின்னர், ஓர் அடி பின்னால் எடுத்துவைக்கிறேன். ஆனாலும், வருங்காலத்தில் வெளிநாடுகளில் எங்கேயாவது பணியை தொடர்வேன். எதிர்காலத்தை எனது தாய்நாடான நியூஸிலாந்தில் அமைத்துக் கொள்வேன். இங்கிலாந்தின் செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் பணிபுரிந்ததையும், அற்புதமான செவிலியர் அணியில் இடம்பெற்றதையும் பெருமையாக கருதுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மெக்ஜி ராஜினாமா செய்ததை அவர் பணிபுரிந்த மருத்துவமனை நிர்வாகமும் உறுதிப்படுத்தியது. இதுதொடர்பாக பிரிட்டன் அரசு வெளியிட்ட அறிக்கையில், நமது தேசிய சுகாதார சேவைகள் பிரிவு பணியாளர்கள் கடந்த ஓராண்டு காலத்தில் தன்னலமின்றி பணியாற்றி உயரிய இடத்தை பெற்றுவிட்டனர். அவர்களது நலன் காக்க அரசு தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். கரோனா பெருந்தொற்று காலத்தில் அயராது பணியாற்றிய செவிலியர்களுக்கு நாம் நன்றி கடன்பட்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் அரசை விமர்சித்து தொழிலாளர் கட்சி தலைவர் கெயில் ஸ்டார்மர் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் போரிஸ் ஜான்சனின் பொறுப்பற்ற தன்மையால்தான், சுகாதார சேவையை கைவிட்டு செவிலியர்கள் பின்வாங்குகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.

ராயல் செவிலியர் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரியும், பொறுப்பு பொதுச் செயலாளருமான பாட் கல்லன் வெளியிட்ட அறிக்கையில், செவிலியர்கள் மருத்துவ சேவையிலிருந்து வெளியேறுவது என்பது அரசுக்கான எச்சரிக்கை மணி. எனவே திறமையான பணியாளர்களுக்கு நியாயமான ஊதியத்தை அரசு உறுதிசெய்து அவர்களின் கண்ணியத்தை காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதவிர செவிலியர்களுக்கான ஊதிய விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிடவில்லை என்றால், மேலும் பல செவிலியர்களை நாம் இழக்க நேரிடும் என யூனிஷன் யூனியனின் தலைவர் சாரா கார்டன் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Add your comment

Your email address will not be published.

six + eleven =