24.6.21 இந்திய செய்திகள் சில வரிகளில்…

* தமிழ்நாட்டில் முதன்முறையாக சென்னையை சேர்ந்த பெண் டெல்டா பிளஸ் தொற்றுக்குள்ளானார். இதன்மூலம் டெல்டா பிளஸ் தமிழகத்தில் நுழைந்திருக்கிறது. இது கோவிட் 3ஆம் அலையின் ஆரம்பமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

* தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற அதிமுக துணைநிற்க வேண்டுமென முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி ஏற்றுக் கொண்டார்.

* இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி 28,709 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானது. இதன்மூலம் பாதிப்பின் எண்ணிக்கை 3 கோடியை கடந்தது.

* தமிழ்நாட்டில் கோவிட் 2ஆம் அலையை எதிர்கொள்ள இதுவரை ரூ.20,000 கோடி செலவிடப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தெரிவித்தார்.

* வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு பிரச்சினையில் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என பாமக உறுப்பினர் ஜி.கே. மணி எழுப்பிய கேள்விக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்தார்.

* மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட திட்டத்தில் கோவை புறக்கணிக்கப்படுவதாக பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டசபையில் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக ஆட்சியில் கோவைக்கு நிறைய நற்பணிகள் செய்யப்படும் என்றார்.

* ஆளுநர் உரையில் புதிய அறிவிப்புகளோ, திட்டங்களோ இன்றி, அது வெற்று அறிக்கையாக காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது பேசினார்.

* புதுச்சேரியில் டெல்டா பிளஸ் தொற்று பரவல் முற்றிலும் இல்லை என விளக்கம் அளித்தார் துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சௌந்தரராஜன்.

* புதுவையில் 45 நாள்களுக்குப் பிறகு அமைச்சரவை வரும் 27ஆம் தேதி பதவியேற்கிறது. இதற்கான பெயர் பட்டியலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜிடம் முதல்வர் ரங்கசாமி சமர்ப்பித்தார்.

* சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தாக்கியதில், விவசாயி முருகேசன் உயிரிழந்த சம்பவம் பெரும் சாத்தான்குளம் நிகழ்வுக்கு நிகராக பேசப்பட்டது. சம்பந்தப்பட்ட சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். இறந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

* கருப்பு பூஞ்சை நோய்க்கான சிகிச்சைக்கு கூடுதலாக 61,120 லிபோசோமல் ஆம்”ஃ”போடெரிசின் பி குப்பிகள் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கௌடா தெரிவித்தார்.

* டீமானிடைசேஷன் எனப்படும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு இல்லத்தரசிகள் ரூ.2.50 லட்சம் வரை செய்யும் ரொக்க டெபாசிட்டுகள் வருமான வரித்துறையின் ஆய்வு நடவடிக்கைக்குள் வராது என வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தெரிவித்திருக்கிறது,

* கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள செல்போனும், முகவரிச் சான்றும் கட்டாயமில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்திருக்கிறது.

* இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டு போர்ப் பயிற்சியை நேற்று தொடங்கின. இன்று இந்த பயிற்சி நிறைவடைகிறது.

* இந்தியா- சீனா எல்லை பிரச்சினையை ராஜீய ரீதியிலான பிரச்சினையுடன் தொடர்புப்படுத்தக் கூடாது என சீனா கேட்டுக் கொண்டது.

* குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த டெல்லியில் இருந்து உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தனது கிராமத்துக்கு ரயிலில் இன்று பணிக்கிறார். அப்துல் கலாமுக்கு பிறகு 15 ஆண்டுகள் கழித்து குடியரசுத் தலைவர் ஒருவர் ரயிலில் பயணிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்தியாவுக்கு நாடுகடத்துவதற்கு எதிராக வைர வியாபாரி நீரவ் மோடி விண்ணப்பித்த மேல்முறையீட்டு மனுவை பிரிட்டன் உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

Add your comment

Your email address will not be published.

one × four =