‘இந்தியாவிலிருந்து திரும்பினால் சிறையில் அடைக்கப்படுவீர்கள்’

ஆஸ்திரேலியா அதிரடி அறிவிப்பு

கரோனா இரண்டாம் அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்தியாவிலிருந்து திரும்பும் ஆஸ்திரேலிய பிரஜைகள் பட்சபாதமின்றி சிறையில் அடைக்கப்படுவர் என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் கிரெக் ஹண்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் தனிமைப்படுத்தப்படும் நபர்கள் கரோனா தொற்றுக்கு உள்ளாகும் விகிதாச்சாரத்தை கணக்கில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாகவும், இந்தியாவிலிருந்து தற்போது ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்வது சட்டவிரோத பயணமாகவே கருதப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிறை தண்டனை மட்டுமன்றி, 66 ஆயிரம் அபராதம் ஆஸ்திரேலிய டாலர் (இந்திய மதிப்பில் ரூ.48.90 லட்சம்) அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஏற்கெனவே, இந்த வார தொடக்கத்தில் இந்தியாவிலிருந்து விமான சேவை அனைத்தையும் ஆஸ்திரேலியா ரத்து செய்தது.

இந்தியாவில் தற்போது சுமார் 9000 ஆஸ்திரேலியர்கள் தங்கியிருப்பதாகவும், அதில் 600 பேர் கரோனா தொற்றுக்கு எளிதில் பாதிக்கப்பட சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவுக்கு டாக்டர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்நாட்டின் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்தியாவில் நமது குடும்ப உறுப்பினர்கள் மரணத்தை தழுவி வருகின்றனர். இந்த வேளையில் அவர்களை அங்கிருந்து மீட்காமல் கைவிடுவது முறையல்ல என்றார்.
இந்த உத்தரவு மே 3ஆம் தேதி (திங்கள்கிழமை) முதலில் அமலுக்கு வரும் என்றும், மே 15இல் மறுஆய்வு செய்யப்படும் என்றும் ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

Add your comment

Your email address will not be published.

four − two =