புதுச்சேரி தலைமை பொறியாளர் அலுவலகம் ஜப்தி
கட்டுமான நிறுவனத்திற்கு ரூ. 15.39 கோடி பாக்கி.புதுச்சேரி தலைமை பொறியாளர் அலுவலகம் ஜப்தி.
புதுச்சேரி நகரப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க உப்பனாறு வாய்க்கால் மீது மேம்பாலம் கட்ட அரசு திட்டமிட்டது. காமராஜர் சாலை பாலாஜி தியேட்டர் அருகே துவங்கி மறைமலையடிகள் சாலை வரை 732 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலம் கொண்ட இரு வழிச்சாலையும், இருபுறமும் 1.5 மீட்டர் அகல நடைபாதையுடன் பாலம் அமைக்கும் பணிக்கு கடந்த 2008 ம் ஆண்டு பூமி பூஜை நடந்தது.
ரூ. 3.5 கோடிக்கு பைல் பவுண்டேஷன் அமைத்த பின்பு கட்டுமான நிறுவனம், பணியை பாதியில் நிறுத்திச் சென்றது. அதன்பின்பு கடந்த 2014ம் ஆண்டு, ஹட்கோ வங்கியில் ரூ. 37 கோடி கடன் பெற்று, மாநில அரசின் ரூ. 7.15 கோடி நிதியுடன் மேம்பாலம் கட்டுமான பணி மீண்டும் துவங்கியது. மதுரை கே.எப்.கட்டுமான நிறுவனம் பணியை துவக்கியது.
என்.ஆர்.காங்., ஆட்சி மாறிய காங்., ஆட்சிக்கு வந்த பின்பு கட்டுமான பணி மேற்கொள்ள பல்வேறு இடையூறுகள் நடந்தது. மேம்பாலத்துடன் காமராஜர் சாலை, மறைமலையடிகள் சாலையை இணைக்கும் திட்ட வரைப்படத்தை பொதுப்பணித்துறை கடைசி வரை வழங்கவில்லை. இதனால் கட்டுமான பணியை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. கட்டுமான நிறுவனம் முடித்த பணிகளுக்கு அரசு ரூ. 5 கோடி பணம் வழங்காமல் காலம் தாழ்த்தியது. அரசு வழங்க வேண்டிய தொகை வழங்க கோரி கட்டுமான பணியில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் ஆர்பிடேஷனில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், கட்டுமான நிறுவனத்திற்கு புதுச்சேரி பொதுப்பணித்துறை ரூ. 13 கோடியை வட்டியுடன் வழங்க கடந்த 2021ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் பொதுப்பணித்துறை அத்தொகையை வழங்காமல் இழுத்தடித்து வந்தது. தீர்ப்பு நிறைவேற்று மனு புதுச்சேரி 3வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.மனுவை விசாரித்த நீதிபதி இளவரசன், வட்டியுடன் சேர்த்து ரூ. 15.39 கோடி பணத்தை கட்டுமான நிறுவனத்திற்கு பொதுப்பணித்துறை வழங்க உத்தரவிட்டார். ஆனால், பொதுப்பணித்துறை பணம் தரவில்லை.
இதைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று மதியம் புஸ்சி வீதியில் உள்ள புதுச்சேரி தலைமை பொறியாளர் அலுவலகம் வந்த நீதிமன்ற அமீனா அம்பி, கட்டுமான நிறுவன மேலாளர் பன்னீர்செல்வம், வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமை பொறியாளர் அலுவலத்தை ஜப்தி செய்து அதற்கான நோட்டீசை அலுவலக வாசலில் ஒட்டிச் சென்றனர்…