பிரிட்டன் அமைச்சரவை இன்று கூடுகிறது

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பிரிட்டன் அமைச்சரவை இன்று (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது.

பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சி நன்கொடைதாரர்களிடமிருந்து ரகசியமான முறையில் தாராளமாக நிதி பெற்று, அதை பயன்படுத்தி தனது அதிகாரபூர்வ இல்லத்தை புதுப்பித்ததாகவும், இதில் விதிமீறல் அரங்கேறியதாகவும் அவரது முன்னாள் ஆலோசகர் டொமினிக் கமிங்ஸ் குற்றம்சாட்டியது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, மூன்றாம் கட்ட பொதுமுடக்கத்துக்கு (லாக் டவுன்) ஒப்புதல் அளிப்பதற்கு முன்பாக ஏராளமான பிணக் குவியல்களை தான் பார்ப்பதாகவும் பிரதமர் வேடிக்கையாக கருத்து கூறியதாக தகவல் வெளியானது.

எனினும், இந்தக் கருத்தை பிரதமர் போரிஸ் ஜான்சனும், அவரது அமைச்சரவையும் திட்டவட்டமாக மறுத்தது. இதுகுறித்து பிரதமர் திங்கள்கிழமை கூறுகையில், இந்த இக்கட்டான சூழலில் மக்களுடன் நாங்கள் இருந்து, பொதுமுடக்கத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதை நான் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறேன் என்றார். இதேபோல், பிரதமர் மீதான நன்கொடை விவகாரத்தில் கருத்து கூறிய அமைச்சரவை, பரிசுகள் அல்லது பயன்பாடுகள் ஏதும் பெறப்பட்டிருப்பின் அது அமைச்சரவையின் திறந்த பதிவேட்டில் பதிவு செய்யப்படும் என தெரிவித்தது.

பரபரப்பான அரசியல் சூழல், அமைச்சரவையை பிரதமர் போரிஸ் ஜான்சன் செவ்வாய்க்கிழமை கூட்டுகிறார். இதில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து, அன்றாட பணியில் அமைச்சரவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்த பிரதமர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add your comment

Your email address will not be published.

19 − seven =