பிரதமருக்கு வலுக்கிறது சிக்கல்

நன்கொடை விவகாரம்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீதான நன்கொடை விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக பாராளுமன்ற பொது அவையை உடனடியாக கூட்ட வேண்டுமென தொழிலாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதனால், பிரதமருக்கு சிக்கல் வலுக்கிறது.

பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது கன்சர்வேடிவ் கட்சி நன்கொடைதாரர்களிடமிருந்து நன்கொடை பெற்று தன்னுடைய அதிகாரபூர்வ இல்லத்தில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டதாகவும், இதில் விதிமீறல் அரங்கேறியதாகவும் அரசின் முன்னாள் தலைமை ஆலோசகர் டொமினிக் கம்மிங்க்ஸ் குற்றம்சாட்டியது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விளக்கம் அளித்த அரசு, தனது வீட்டை மறுசீரமைப்பதற்கான பரந்த அளவிலான நிதியை பிரதமர் தனிப்பட்ட முறையில் திரட்டியதாக குறிப்பிட்டது.இந்த விவகாரத்தில் உடனடியாக பாராளுமன்ற பொது அவை உறுப்பினர்களுக்கு சம்மன் அனுப்பி, பாராளுமன்றத்தை கூட்டி, எம்.பி.க்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டுமென தொழிலாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக திங்கள்கிழமை பொது அவை சபாநாயகரை சந்திக்க திட்டமிட்டுள்ள அக்கட்சியினர், மூத்த அமைச்சர்களுக்கு குறுகிய கால நோட்டீஸ் பிறப்பித்து, அவர்களிடம் எம்.பி.க்கள் கேள்வி எழுப்ப அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளனர்.
பிரதமர் மீதான இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த டொமினிக் கம்மிங்க்ஸ், அரசில் கேபினெட் அமைச்சர்களுக்கு நிகரான பதவியில் இருந்துவந்த நிலையில், உள்கட்சி அதிகார மோதல் காரணமாக கடந்த ஆண்டு இறுதியில் தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

4 × 3 =