பெகாசஸ்: ராஜஸ்தான் முன்னாள் முதல்வரை வேவுபார்த்த பிரதமர்

காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

இஸ்ரேலை மையமாக கொண்டு செயல்பட்டுவரும் பெகாசஸ் என்ற சா”ஃ”ப்ட்வேரின் அடிப்படையில், உலகம் முழுவதும் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டு, அவர்களது ரகசிய நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதன்படி, இந்தியாவில் 300க்கும் மேற்பட்ட நபர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இதற்கு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தலைவரே தப்பவில்லை என்பது தான் அதிர்ச்சியளிக்கும் தகவல்.

ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதல் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான வசுந்தர ராஜேயின் தனிப்பட்ட உதவியாளரின் செல்போன் கடந்த 2017 முதல் 2019ஆம் ஆண்டுவரை ஒட்டுகேட்கப்பட்டு, வசுந்தராவை குறித்த தனிப்பட்ட தகவல்கள் திரட்டப்பட்டதாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.எஸ். டோடஸ்ரே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதனால்தான் வசுந்தராவுக்கும், மோடி, அமித்ஷாவுக்கும் உரசல் ஏற்பட்டதாக கூறிய அவர், மோடியும், அமித்ஷாவும் யாரையும் விட்டுவைப்பதில்லை. எதிர்க்கட்சிகளை ஒழிக்க சதிசெய்யும் அதேவேளையில், தங்கள் சொந்த கட்சி தலைவர்களையே அவர்கள் உளவு பார்த்திருக்கின்றனர் என்று கூறினார் காங்கிரஸ் தலைவர் ஜி.எஸ். டோடஸ்ரே. மேலும், இதற்காக பிரதமர் மோடி மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உளவுபார்த்த விவகாரத்தில் மத்திய அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், இதுவரை இதற்கு பாஜக தரப்பிலோ அல்லது வசுந்தர ராஜே தரப்பிலோ விளக்கமோ அல்லது மறுப்போ தெரிவிக்கப்படவில்லை.

Add your comment

Your email address will not be published.

three + 5 =