ஜெர்சி கடற்பகுதியில் பதற்றம் பிரிட்டன் கப்பல்கள் ரோந்து

 

பிரெக்ஸிட்டுக்கு பிந்தைய தங்கள் மீன்பிடி உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தி, பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்ட ஜெர்சி துறைமுகம் அருகே மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அந்த இடத்தை நோக்கி பிரெஞ்சு கடற்படை கப்பல் விரைந்தது. இதனால், அங்கு பதற்றம் தொற்றிக் கொள்ளவே சம்பவ இடத்தில் பிரிட்டனின் கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.

ஜெர்சி தீவின் செயின்ட் ஹேலியர் துறைமுகத்துக்குச் செல்லும் நீர் வழித்தடத்தை அடைத்து, பிரெஞ்சு மற்றும் ஜெர்சியை சேர்ந்த மீனவர்கள் சுமார் 60 படகுகளை நிறுத்தியிருக்கின்றனர். புதிய சட்டத்திட்டத்தின்கீழ், தங்களுக்கு விநியோகிக்கப்பட்ட லைசென்ஸ் வாயிலாக தங்களது உரிமைகள் பறிக்கப்படுவதாக குற்றம்சாட்டி, மீனவர்கள் இந்த யுக்தியை கையாண்டு வருகின்றனர்.

இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால், எச்.எம்.எஸ். செவர்ன், எச்.எம்.எஸ். தாமர் என இரண்டு கடற்படை கப்பல்களை பிரிட்டன் அரசு அனுப்பிவைத்தது. எச்எம்எஸ் செவர்ன் கப்பல், இங்கிலாந்து கடல் பகுதியில் ரஷிய கப்பல் முகாமிட்டிருந்த காலகட்டத்தில், அதனை எதிர்கொள்ள பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு கப்பல்களும் அங்கு கண்காணிப்பு பணியில் மட்டுமே ஈடுபட்டு வருவதாகவும், நிலைமையில் குறுக்கிவிடவில்லை என்றும் இங்கிலாந்து அமைச்சரவை தெரிவிக்கிறது.
இந்த விவகாரத்தில் சுமூக தீர்வு காணப்படவில்லை என்றால், ஜெர்சி தீவுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சாரம் துண்டிக்கப்படும் என பிரெஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

காரணம்என்ன?
பிரிட்டன்- ஐரோப்பிய யூனியன் வணிக ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின்கீழ், ஜெர்சி அரசு கடந்த வாரம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், ஜெர்சி கடற்பகுதியில் மீன்பிடிக்கும் பிரெஞ்சு நாட்டுப் படகுகள், ஏற்கெனவே இங்கு மீன்பிடித்ததற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரான்சு மீனவர்கள், தங்களின் கருத்தைக் கேட்டறியாமலும், தங்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்காமலும் ஜெர்சி அரசு விதிமுறைகளை வகுத்ததாக குற்றம்சாட்டி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Add your comment

Your email address will not be published.

thirteen − six =