கொரோனா பரவலால் ஒலிம்பிக் போட்டிகள் ரத்தா

டோக்கியோ ஒலிம்பிக் தலைவர் பதில்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. ஒருபோதும் இல்லாத வகையில், தற்போது உலகமே கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால், நிகழாண்டு ஒலிம்பிக் போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதேவேளையில், ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருந்த தென் ஆப்பிரிக்க கால்பந்து வீரர்கள் இருவர் கடந்த வாரம் கொரோனா தொற்றுக்குள்ளாயினர்.

இதேபோல், செக் குடியரசு வாலிபால் வீரரும் தொற்று பாதிப்புக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். இதுதவிர ஒலிம்பிக் ஊழியர்கள் என இதுவரை 71 பேர் கோவிட் பாதிப்புக்குள்ளாகி, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஒலிம்பிக் கிராமத்தில் கோவிட் தொற்று பரவல் அதிகரித்திருப்பதன் காரணமாக போட்டிகள் நிகழாண்டு ரத்து செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால், இதை திட்டவட்டமாக மறுத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பச், ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்வதற்கான பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார். இந்த நிலையில், இதற்கு மாறாக டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி தலைவர் டோஷ்ரே மியூட்டோ கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டபோது, கோவிட் பாதிப்பு நிலவரத்தை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். போட்டிகளை ரத்து செய்வது தொடர்பாக தேவைப்பட்டால், ஆலோசனை நடத்தி முடிவு எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் ஒரே ஒரு நாள் மட்டும் உள்ள நிலையில், அதன் கமிட்டியில் அங்கம் வகிக்கும் இரு உயர்மட்ட தலைவர்களும் இருவேறு கருத்துகளை தெரிவித்திருப்பது ஒலிம்பிக் வீரர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

thirteen − 6 =