‘கவலைப்படும்படி ஏதுமில்லை’

நன்கொடை விவகாரத்தில் பிரதமர் கருத்து

பிரதமர் போரிஸ் ஜான்சன் டவ்னிங் தெருவில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தை சீரமைப்பதற்காக கன்சர்வேடிவ் கட்சி நன்கொடைதாரர்களிடமிருந்து நிதி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு அரசியல் அரங்கில் புயலை கிளப்பியிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதை உணர்ந்த தேர்தல் ஆணையம், இதன் மீது உடனடியாக விசாரணையை தொடங்கியதுடன், கன்சர்வேடிவ் கட்சி தொடர்புடைய அரசியல் நன்கொடைகளையும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
இந்த விவகாரம் குறித்து வியாழக்கிழமை கருத்து தெரிவித்த பிரதமர் போரிஸ் ஜான்சன், தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு நான் உடன்படுவேன். ஆனாலும், அதில் கவலைப்படும் வகையில் ஏதுமில்லை. அர்த்தமுள்ள விஷயங்களில் மட்டுமே எப்போதும் நான் கவனம் செலுத்துவேன் என்று கூறினார்.

இதனிடையே, பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தை புதுப்பித்ததற்கான செலவை மேற்கொண்டது யார் என்ற கேள்விக்கு அவர் உடனடியாக பதிலளிக்க வேண்டுமென தொழிலாளர் கட்சி வலியுறுத்தியது. இதுகுறித்து அக்கட்சி தலைவர் சர் கெயிர் ஸ்டார்மர் கூறும்போது, தற்போதைய சூழல் கேலிக்கூத்தாக மாறிவருகிறது. நாங்கள் எழுப்பும் கேள்விக்கு பதிலளிக்க பிரதமருக்கு ஒரு நிமிடம் போதும். அதன்பின்னர், அவர் தனது அன்றாடப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றார்.
பிரதமரின் இல்லத்தில் உள்கட்டமைப்பு வடிவமைப்பாளர் லூலு லைட் என்பவரால் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிக்காக மொத்தம் 2 லட்சம் பவுண்ட் வரை செலவானதாகவும், இதற்காக வரிசெலுத்துபவர்களிடம் இருந்து பிரதமர் ஆண்டுக்கு 30 ஆயிரம் பவுண்ட் வரை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

four × 2 =