ஆக்சிஜன் மட்டுமல்ல டெல்லியில் சுடுகாட்டிலும் இடமில்லை

 

இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்துவரும் கரோனா நோய்த்தொற்றால் தினந்தோறும் பலியாவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், தலைநகர் டெல்லியில் இறந்தவர்களை புதைக்கக் கூட இடமின்றி, தற்காலிக தகனமேடைகளை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதற்காக தகுந்த இடங்களை அடையாளம் காணுமாறு உள்ளூர் அதிகாரிகளிடம் காவல் துறை கேட்டுக் கொண்டது. கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய ரணத்தால், டெல்லியில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இடுகாட்டில் சடலங்களை எரியூட்டுவதற்கு இடமின்றி, கரோனா தாக்கி பலியானவர்களின் உடல்களை நாள் முழுவதும் வரிசையில் அடுக்கிவைத்து, காத்திருக்க வேண்டிய அவலம் நிலவுகிறது.
இந்தியாவில் வியாழக்கிழமை மட்டும் கரோனாவுக்கு 3,500 பேர் பலியாகினர். இதில், டெல்லியில் மட்டுமே 400 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டரும், படுக்கைகளும் இல்லாததால், கரோனா பாதித்தவர்களின் உறவினர்கள், சமூக வலைதளங்களில் உதவி கேட்டு பதிவு வெளியிட்டு வருவதை காண முடிகின்றது.

இந்தியாவில் கரோனா பரவலுக்கு மத்தியிலும் தேர்தல் பொதுக்கூட்டம், மத திருவிழாக்களுக்கு அனுமதி அளித்த காரணத்தால், மத்திய அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. இதற்கு பதிலளித்த இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கரோனா பலி எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றார்.

இதனிடையே, பொது முடக்கமும், தடுப்பூசியும்தான் கரோனா தொற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். இந்தியாவில் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

two × four =