5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் 50 சதவீத புதிய எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள்

 

இந்தியாவில் அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் தேர்வாகி சட்டப் பேரவைக்குள் காலடி எடுத்துவைக்கும் புதிய எம்.எல்.ஏ.க்களில், 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. ஜனநாயக சீர்திருத்த சங்கம் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இந்த விவரம் வெளியாகியுள்ளது.
இதில் அதிகபட்சமாக கேரளாவில் 71%, தமிழகத்தில் 60%, மேற்குவங்கத்தில் 49%, புதுச்சேரியில் 43%, அசாமில் 27% எம்எல்ஏக்கள் மீது குற்றவழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
5 மாநிலங்களிலும் தேர்வான 822 எம்எல்ஏக்களில், 802 பேரின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில், இந்த விவரம் தெரியவந்துள்ளது. எஞ்சிய உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரத்தில் குற்ற வழக்குகள் தொடர்பாக தெளிவான விவரம் குறிப்பிடப்படாததால், அதைக் கண்டறிய முடியவில்லை என ஜனநாயக சீர்திருத்த சங்கம் தெரிவித்திருக்கிறது.

கோடீஸ்வர வேட்பாளர்களை எடுத்துக் கொண்டால், தமிழகத்தில் 85%க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருக்கின்றனர். புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் முறையே 83%, 67%, 55%, 54% என கோடீஸ்வர எம்எல்ஏக்களின் பட்டியல் நீள்கிறது.
குறிப்பாக கேரளாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் (ஆண்கள்) அனைவரும் கோடீஸ்வரர்கள் என்பதும், 26% கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் 1 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட சொத்து மதிப்புடன் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
5 மாநிலங்களிலும் 63% வேட்பாளர்கள் பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு முடித்திருக்கின்றனர். 35% எம்எல்ஏக்கள் ஐந்தாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலும் கல்வித்தகுதி பெற்றுள்ளனர். வயதுவாரியாக கணக்கிட்டால், பெரும்பாலான வெற்றி வேட்பாளர்கள், அதாவது 63 சதவீதத்தினர் 51 முதல் 80 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். 37 சதவீதத்தினர் 25 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள். ஒரே ஒருவர் மட்டும் 80 வயதைக் கடந்தவர் ஆவார்.