லண்டனில் மகளை குத்திக் கொன்ற தமிழ்ப் பெண்

 

”புற்றுநோய் பாதிப்பால் தனது வாழ்க்கை முடிந்துவிடும் என்ற தவறான கண்ணோட்டத்தில் வெறிச்செயல்”

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் சிவானந்தம். இவரது மனைவி சுதா (வயது 36). தற்போது லண்டன் மிட்ச்சாம் பகுதியில் வசிக்கும் இத்தம்பதிக்கு சயாகி என்ற 5 வயது மகள் இருந்தார். கடந்த ஆண்டு ஊரடங்கின் போது, உடல்நலன் பாதிக்கப்பட்ட சுதா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அவரது உடல் எடையும் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வந்ததால், ஒருவேளை தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடுமோ என்று கருதிய சுதா, இதுதொடர்பாக தனது கணவரிடம் புலம்ப தொடங்கினார். மேலும், தான் இறந்துவிட்டால் குழந்தையை நல்ல முறையில் பார்த்துக்கொள்ளுமாறும் கெஞ்சினார்.

ஒருவழியாக கணவரும் அவரை சமாதானப்படுத்தினார். ஆனாலும், ஊரடங்கு நேரத்தில் விரக்தியின் விளிம்புக்கே சென்ற அவர், குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதென தீர்மானித்தார். அதன்படி, கடந்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி தனது கணவர் அலுவலகம் சென்றிருந்த நேரத்தில், தனது மகள் சயாகியை 15 முறை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
இதில், குழந்தையின் இதயம் உள்ளிட்ட பகுதிகளில் கத்திக்குத்து விழுந்து, அதே இடத்தில் சயாகி துடிதுடித்து இறந்தார். இதைத்தொடர்ந்து தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்டு ரத்த வெள்ளத்தில் சுதா சரிந்தார்.

இதைப் பார்த்து பதறி போன அக்கம்பக்கத்தினர், சுதாவை மீட்டு மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சைக்குப் பின்னர், அவர் காப்பாற்றப்பட்டார். குழந்தையை கொலை செய்த குற்றத்தின்கீழ், அவர் மீது உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை ஓல்டு பெய்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

கணவர் கண்ணீர்…

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சுதா நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது கணவர் சிவானந்தமும் ஆஜராகி, மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் கோர்ட்டு நடவடிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது, சுதாவுக்கு மனநல சிகிச்சையளித்த டாக்டர் கூறுகையில், சுதா மிகுந்த விரக்தியிலும், மன அழுத்தத்திலும் இருந்திருக்கிறார். ஆனால், அதைக் கண்டறிய டாக்டர்கள் தவறிவிட்டனர் என்று தெரிவித்தார்.

அப்போது, சிவானந்தம் கூறுகையில், சுதாவுக்கான பிரச்சினைகளை டாக்டர்கள் முறையாக அணுகவில்லை. அவருக்கான சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார். ஒருகட்டத்தில் தனது மனைவியின் நிலையை உணர்ந்து, சிவானந்தம் கண்ணீர் வடித்தது கோர்ட்டில் இருந்த அனைவரையும் நெகிழ வைத்தது.

வாதத்தைக் கேட்டறிந்த நீதிபதி வென்டி ஜோசப், இது மிகவும் தீவிரமான வழக்கு என்பதால், சுதாவை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்கு வேண்டிய மனநல ஆலோசனையை காலவரையறையின்றி அளிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

Add your comment

Your email address will not be published.

4 × 5 =