நடுவானில் திருமணம் விளக்கம் கேட்கிறது விமானப் போக்குவரத்து இயக்குநரகம்

 

மதுரை- தூத்துக்குடி இடையிலான வான்வழி பயணத்தில் இளம் ஜோடிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. இதற்காக வானில் சுமார் இரண்டு மணிநேரம் அந்த விமானம் பறந்தது. பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரத்துக்கு மேல் விமானம் பறந்தபோது மணப்பெண்ணின் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். அப்போது கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்காமல், உறவினர்கள் மிகவும் நெருக்கமாக நின்றுகொண்டு முகக்கவசம் அணியாமல் காட்சியளித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
இதை மிகவும் தீவிரமாக கருதிய விமான போக்குவரத்து இயக்குநரகம், அந்த விமான ஊழியர்களை பணியிலிருந்து விடுவித்து, கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற தவறிய நபர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்குமாறு அந்த விமான நிறுவன நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தனிப்பட்ட முறையில் விமானத்தை வாடகைக்கு பெறுபவர்கள், கரோனா வழிமுறைகளை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இதுவும் வீட்டை வாடகைக்கு பெறுவதை போல் தான். வாடகைக்கு குடியேறுவர்கள் விதிமுறைகளை புறக்கணித்தால், வீட்டின் உரிமையாளர் என்ன செய்வார். திருமண ஜோடிகள் விமானத்தை வாடகைக்கு பெறும் அளவுக்கு வசதிபடைத்தவர்களாக இருக்கலாம். அதற்காக விதிமுறைகளை புறக்கணிக்க கூடாது என்றார்.

Add your comment

Your email address will not be published.

four − 3 =