லண்டன் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல்

தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரம்

லண்டன் மேயர் பதவி, 143 ஆங்கில கவுன்சில், 13 உள்ளூர் மேயர் பதவிகள், ஸ்காட்லாந்து பாராளுமன்றம், வேல்ஸ் மாகாண செனட் சபை என பிரிட்டனில் பிரமாண்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (மே 6) நடைபெறுகிறது. இதேபோல், ஹார்ட்டில்பூல் வெஸ்மின்ஸ்ட்ர் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு நிறைவடைகிறது.
இதில், பெரும்பாலான தேர்தல்கள் கடந்த ஆண்டு நடைபெற இருந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் இங்கிலாந்தில் மட்டும் 40 லட்சத்து 80 ஆயிரம் பேர் வாக்களிக்கின்றனர். வேல்ஸ், ஸ்காட்லாந்திலும் லட்சக்கணக்கானோர் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற இருக்கின்றனர். வெள்ளிக்கிழமை (மே 7) தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. ஒருசில இடங்களில் மட்டும் முடிவுகள் வெளியாக தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2019 பொதுத்தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்த நிலையில், இந்தத் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர் கட்சி தலைவராக சர் கெயிர் தேர்ந்தெடுக்கப்பட்டு 13 மாதங்களும், லிபரல் டெமாக்ரேட் கட்சி தலைவர் பதவியை எட் டாவே கைப்பற்றி 8 மாதங்களும் ஆவதால், அவர்களது தலைமைப் பண்பை நிர்ணயிக்கும் சக்தியாகவும் இந்தத் தேர்தல் கருதப்படுகிறது.
இதனிடையே கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஸ்டோர்பிரிட்ஜில் வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் மேயர் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட போரிஸ் ஜான்சன், செய்தியாளர்களிடம் கூறியது:
இந்தத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர்கள் கடுமையான போட்டியை எதிர்கொள்கின்றனர். ஆனாலும், ஒவ்வொரு வாக்கையும் பெறுவதற்காக நாங்கள் கடுமையாக பாடுபடுகிறோம் என்றார்.

மேலும், டீஸ் பள்ளத்தாக்கு, வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் மேயர் தேர்தலிலும், ஹார்ட்டில்பூல் இடைத்தேர்தலிலும் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்று “ஹாட்ரிக்’ சாதனை நிகழ்த்துமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, இது கடினமான போட்டி. ஹார்ட்டில்பூல் உருவான நாளில் இருந்தே அங்கு கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றது கிடையாது. ஆனாலும், நாங்கள் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன் என்றார்.
தொடர்ந்து, ஸ்காட்லாந்து பாராளுமன்றத் தேர்தலில் அந்நாட்டின் சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கும் கட்சிகள் பெரும்பான்மை தொகுதிகளில் வென்று மீண்டும் ஒருமுறை சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு கோரினால், நீங்கள் அனுமதிப்பீர்களா? என்று கேட்டதற்கு, ”என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஸ்காட்லாந்தில் பெரும்பாலான மக்களும், பிரிட்டனை சுற்றியுள்ளவர்களும், நாம் பெருந்தொற்றிலிருந்து விடுபட வேண்டுமென உணர்கின்றனர். ஆகையால், பொறுப்பற்ற முறையில் செயல்படுவதற்கு இது நேரமில்லை. மேலும், இரண்டாவது முறை வாக்கெடுப்பு கோருவதை பொறுப்பற்ற செயல் என்றே நான் கருதுகிறேன்” என்று அவர் பதிலளித்தார்.

Add your comment

Your email address will not be published.

1 × 1 =