டெல்லியில் நீடிக்கிறது ஆக்சிஜன் பற்றாக்குறை

 

ஒரே நாளில் 407 பேர் சாவு

 

டெல்லி மருத்துவமனைகளில் உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தொடர்ந்து பற்றாக்குறை நீடிப்பதால், ஒரே நாளில் 407 பேர் கரோனாவுக்கு பலியாக நேர்ந்தது.

 

டெல்லியில் உள்ள பிரபல மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை ஆக்சிஜன் பற்றாக்குறையால், டாக்டர் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை நிலவுவதால், கரோனா நோயாளிகளுக்கான பிராணவாயு வசதியை உறுதிப்படுத்த அவர்களது குடும்பத்தினர் எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய ஆக்சிஜன் சிலிண்டர்களை பெறுவதற்காக 12 மணிநேரம் வரையிலும் கால்கடுக்க காத்திருக்க நேரிடுகிறது.

அன்றாடம் ஆக்சிஜன் சப்ளையை நம்பியிருக்கும் பெரும்பாலான பெரிய மருத்துவமனைகளே அவசர காலங்களில் அவற்றை பயன்படுத்த ஏதுவாக இருப்பு வைப்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்றன. இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில், டெல்லியில் நிலவும் சூழல் பயமுறுத்துகிறது. பிரதான ஆக்சிஜன் டேங்கை நீங்கள் ஒருமுறை பயன்படுத்திவிட்டால், மீண்டும் அதை நிரப்புவதற்கு போதுமான இருப்பு இல்லை என்றார்.

 

அதிலும், ஆக்சிஜன் இருப்பு வைப்பதற்கான டேங்குகள் இல்லாத சிறிய மருத்துவமனைகளில் நிலைமை படுமோசமாக சென்று கொண்டிருக்கிறது. டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் வேளையில், ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதியானது. 407 பேர் பலியாகினர்.

Add your comment

Your email address will not be published.

two + 14 =