அக்கா போட்டியிட்ட தொகுதியில் தங்கைக்கு வாய்ப்பு

 

இங்கிலாந்தின் பெட்லி மற்றும் ஸ்பென் தொகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், தொழிலாளர் கட்சி பெண் வேட்பாளர் பிரபீன் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். இந்தநிலையில், கடந்த மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், வெஸ்ட் யோர்க்ஷிர் நகரின் பிராந்திய மேயர் தேர்தலில் போட்டியிட்ட அவர், வெற்றி பெற்றதால் எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால், பெட்லி மற்றும் ஸ்பென் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

தொழிலாளர் கட்சியின் கோட்டையாக கருதப்படும் இந்தத் தொகுதியில், கடந்த 2016ஆம் ஆண்டுவரை எம்.பி. ஆக இருந்தவர் ஜோ கோக்ஸ். இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால், தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில் இவரது தங்கை 41 வயது கிம் லீட்பீட்டருக்கு வாய்ப்பளிக்க தொழிலாளர் கட்சி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து கிம் கூறுகையில், யோர்க்ஷிரை சேர்ந்த பெண்ணாக இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன். எனது வாழ்நாள் முழுவதும் பெட்லி மற்றும் ஸ்பென் தொகுதியில் தான் செலவழிக்கிறேன். இந்த பகுதி மக்களின் பிரச்னைகளும், சவால்களும் எனக்கு நன்கு தெரியும். இங்கு நான் வேட்பாளராக களமிறங்கினால், கன்சர்வேடிவ் கட்சிக்கு பயம் ஏற்படும் என்றார்.

கடந்த மாதம் நடைபெற்ற ஹார்டில்பூல் எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் தொழிலாளர் கட்சி தோல்வி அடைந்ததால், பெட்லிமற்றும் ஸ்பென் தொகுதியில் வெற்றி பெற்று அந்த இழப்பை ஈடுசெய்யும் முனைப்பில் அக்கட்சி தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறது.

Add your comment

Your email address will not be published.

ten + 6 =